தமிழக காங்.,கில் பதவிக்கு நன்கொடை: மாவட்ட தலைவர்கள் கொந்தளிப்பு
தமிழக காங்.,கில் பதவிக்கு நன்கொடை: மாவட்ட தலைவர்கள் கொந்தளிப்பு
ADDED : ஜன 05, 2025 11:45 PM

'மாவட்ட தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் 5,000 ரூபாய், மாநில நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிடுவோர் 1,000 ரூபாயை, நன்கொடையாக வங்கியில் செலுத்த வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருப்பது, மாவட்ட தலைவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த திட்டமிட்டு உள்ளனர். தற்போது, 77 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். கடந்த செப்டம்பரில் தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது.
அதில், தற்போதுள்ள நிர்வாகிகளை மாற்றி, புதியவர்களை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாநில செயற்குழு உறுப்பினர்கள், துணை தலைவர்கள், பொதுச்செயலர்கள், மாநில செயலர்கள், மாவட்ட தலைவர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும் 18ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டியிடுவோர் விருப்பம் இருந்தால், மாவட்ட தலைவர் பதவிக்கு, 5,000; மாநில நிர்வாக பொறுப்புக்கு, 1,000 ரூபாய் நன்கொடை வழங்கலாம் என, கட்சியின் மாநில தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்தும், மன்மோகன்சிங், இளங்கோவன் படத்திறப்பு விழாவுக்கு வரும் முதல்வருக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது மற்றும் கிராம கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடத்துவது தொடர்பாகவும், மாவட்ட தலைவர்கள், 77 பேருடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் பங்கேற்ற சென்னை மாவட்ட தலைவர்கள் உட்பட பலர், அதிருப்தி காரணமாக பங்கேற்கவில்லை. அணி நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் என, 26 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இது குறித்து, மாவட்ட தலைவர்கள் சிலர் கூறுகையில், 'மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் பதவியை ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் என ஏலம் விடுவது போல், மாநில தலைமையின் அறிவிப்பு உள்ளது. 'நன்கொடை என்ற பெயரில் ஏலம் விடுவது, எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது.
மாநில தலைவர் பதவிக்கும், நன்கொடை கட்டணம் விதித்திருந்தால், கட்சியில் சமூக நீதி, ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகிறது என, ஏற்றுக் கொண்டிருப்போம்' என்றனர்.
இதுபற்றி செல்வப்பெருந்தகை ஆதரவாளர்கள் கூறுகையில், 'மாவட்ட தலைவர்கள் பதவியானது, தகுதியானவர்களுக்கு தான் பதவி வழங்கப்படும். கட்சியில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட தலைவர்களை மாற்ற மாட்டோம்.
'நன்கொடை என்பது கட்சி பதவியை விரும்புவோர், விருப்பப்பட்டால் கொடுக்கலாம். கட்டாயம் தர வேண்டும் என்று கூறவில்லை. அந்த பணமும் கட்சி கணக்கில் தான் சேரும். கட்சி வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்படும்' என்றனர்.
- நமது நிருபர் -