நல்ல திட்டங்களைத் தடுத்துவிட்டு எங்கள் மீது பழிபோடாதீர்கள்: தி.மு.க., அரசுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்
நல்ல திட்டங்களைத் தடுத்துவிட்டு எங்கள் மீது பழிபோடாதீர்கள்: தி.மு.க., அரசுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்
ADDED : செப் 13, 2024 06:23 AM

கோவை: திராவிட அரசியல் என்ற பெயரில் மத்திய அரசின் நல்ல திட்டங்களைத் தடுக்கின்றனர். உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி, மத்திய அரசு மீது பழிபோடுகின்றனர், என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ.,) 7 முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன. அவை, அந்த தொழில்நிறுவனங்களுக்குச் சென்றடைந்ததா என ஆய்வு செய்கிறோம். நாட்டில் 163 முக்கிய எம்.எஸ்.எம்.இ., கிளஸ்டர்கள் உள்ளன. இந்த இடங்களில் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி -'சிட்பி' கிளை திறக்கும் திட்டமும் அந்த 7 அம்சங்களில் ஒன்று. கோவை, குறிச்சியில் கடந்த ஆண்டு ஒரு கிளை திறக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தோம்.
கொடிசியாவுடன் இணைந்து அடல் இனொவேஷன் மையம், டிபன்ஸ் ஹப், என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அவற்றிலும் சிட்பியின் பங்கு உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் அமைப்புகளுக்கு உள்ள பிரச்னைகளைக் கேட்டறிந்தோம்.
வழக்கமாக, அமைச்சர் மனுக்களைப் பெற்று அவற்றைப் பரிசீலிப்பார். இம்முறை, அமைச்சர் சந்திப்பதற்கு முன்பாக, தொழில் அமைப்புகளை ஜி.எஸ்.டி., வருமான வரித்துறை, டெக்ஸ்டைல், லெதர் உட்பட 8 முக்கிய துறை அதிகாரிகள் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள், குறைகளைக் கேட்டறிந்தனர். அவற்றில் உடனடியாக சரிசெய்யப்படக்கூடியவை, கொள்கை அளவில் மாற்றம் செய்யக்கூடியவை எனப் பிரித்து, ஆய்வு செய்தோம். துறை அதிகாரிகள், என்னிடம் அவற்றைச் சுருக்கமாக விவரித்தனர். பெறப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார்.
தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
ஓட்டல் அதிபர் ஒருவர் உங்களிடம் கேட்ட கேள்வி வைரல் ஆகியிருக்கிறதே?
நேற்று (புதன்கிழமை) நடந்த கூட்டத்தில், ஓட்டல் அதிபர் ஒருவர் மிக ஜனரஞ்சகமான வார்த்தைகளைப் பயன்படுத்தி, இனிப்புக்கு ஒரு வரி, காரத்துக்கு ஒரு வரி, கிரீம் போட்டால் ஒரு வரி எனப் பேசினார். நீண்ட நாட்களாக அத்தொழிலில் இருக்கிறார். பெரியவர் அவர் ஸ்டைலில் பேசினார்; அதில் தவறில்லை.
ஆனால், இதைக் கேட்பவர்களுக்கு, ஜி.எஸ்.டி.,க்கு எதிரானவர்களுக்கு இது 'ஆஹா' என இருந்திருக்கும்.
வெளிப்படையாக பார்ப்பவர்களுக்கு, 'ஊறுகாய் மாமி'யைக் கேள்வி கேட்டுவிட்டார். மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என இருக்கும். ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை. ஆனால், அமைச்சர்கள் குழு, ஏறக்குறைய ஓராண்டு காலம், ஒவ்வொரு பொருளாக, தனித்தனியாக, மிக விரிவாக ஆய்வு செய்து, எவ்வளவு வரி விதிக்கலாம் என பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில்தான் வரி விதிக்கப்பட்டிருக்கிறது.
அந்தக் குழுவில் பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங்களில் இருந்தும் அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர். ஓட்டல் துறையில் சேர்ந்தவர்கள் மனு அளித்துள்ளனர். அதையும் குழு பரிசீலிக்கும்.
ஜி.எஸ்.டி.,யால் மக்களுக்கு சுமை இல்லாமல் இருக்க எவ்வளவு முயற்சி செய்ய முடியுமோ, அவ்வளவு முயற்சியை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். மூலப்பொருளுக்கான ஜி.எஸ்.டி., வரி அதிகமாக உள்ளது என, எம்.எஸ்.எம்.இ., துறையில் இருந்து கோரிக்கை வந்துள்ளது. அதையும், ஜி.எஸ்.டி., கவுன்சில் பரிசீலிக்கும்.
ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., வரி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுமா?
ஜி.எஸ்.டி., கவுன்சில் ஆராய்ந்து முடிவு செய்யும். தமிழக நிதியமைச்சர் உட்பட அனைத்து மாநிலத்தின் நிதியமைச்சர்களும் ஜி.எஸ்.டி., கவுன்சிலில் உறுப்பினர்தான். கடந்த 7 ஆண்டுகளில் எந்தவொரு முடிவும், எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து முடிவுகளும் முழு ஒப்புதலுடன்தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒரே ஒரு முறை, கேரளத்தின் முன்னாள் நிதியமைச்சர் லாட்டரி பற்றிய விவாதத்தில், குறிப்பிட்ட வரிவிதிப்பை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற அனைவரும் ஒப்புக் கொண்டனர். அப்போது அந்த அமைச்சர் என் மாற்றுக் கருத்தப் பதிவு செய்து கொள்ளுங்கள். மற்றபடி நிறைவேற்றிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டார்.
அந்த ஒரு சம்பவம் தவிர, இதுவரை எந்தவொரு விவகாரமாக இருப்பினும், ஜி.எஸ்.டி.,யில் எடுக்கப்படும் முடிவுகள் அனைவரின் ஒப்புதலுடன்தான் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சர்கள் குழுவில் மட்டுமல்ல, அதிகாரிகள் மட்டத்திலும் அனைத்து மாநிலங்களின் அதிகாரிகளும் இருக்கின்றனர். எனவே, ஜி.எஸ்.டி.,யைப் பொறுத்தவரை யாராலும் தனி நபராக ஒரு முடிவை எடுக்க முடியாது. நாடு முழுதும் இருந்து பரிந்துரைகள் வரப்பெற்றுள்ளன. ஜி.எஸ்.டி., கமிட்டி ஆராய்ந்து முடிவெடுக்கும்.
பரிந்துரைகளை ஏற்று இதுவரை மாற்றம் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா?
நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவக் காப்பீடு மீதான ஜி.எஸ்.டி.,யை நீக்க, குறைக்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் கேட்டன. ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முன்பிருந்து, ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவக்காப்பீடு மீது வரிவிதிக்கப்பட்டிருந்தது. அது தொடர்ந்து ஜி.எஸ்.டி.,க்கு மாறிவிட்டது; வரியும் சற்று குறைந்திருக்கிறது.
மேலும் குறைக்க கோரிக்கை வந்துள்ளது. தனி நபர் காப்பீடு, குழுக் காப்பீடு, மூத்தகுடிமக்களுக்கு மட்டும் என இதுகுறித்து பெரும் விவாதம் நடந்தது. அனைத்து அமைச்சர்களும் ஒப்புக் கொண்டால் குறைக்கப்படும். சில விஷயங்களுக்கு ஒரே மாதிரியான வரி என்பது சிரமம். மதிப்புக்கூட்டப்பட்ட பொருளுக்கும், கச்சா பொருளுக்கும் ஒரே வரியா என்பதுமே பெரும் விவாதமாகியுள்ளது.
விவசாயிகளைப் பாதிக்காத வகையில் பருத்தி இறக்குமதி மீதான வரி 11 சதவீதமாக குறைக்கப்படுமா?
முன்பு நானே ஒரு முறை குறைத்துக் கொடுத்துள்ளேன். விவசாயிகளைப் பாதிக்காத வகையில், பருத்தி மகசூல் இல்லாத மாதங்களுக்கு மட்டும் விலக்களித்துள்ளோம். இப்போது மீண்டும் கோரிக்கை வந்துள்ளது. சார்ந்த அமைச்சகங்களுடன் இணைந்து பரிசீலிக்கப்படும்.
பம்ப் உற்பத்தியாளர்கள் 12 சதவீதமாக வரியை குறைக்க கோரியுள்ளனர். குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து, வரி செலுத்தாமல் பொருட்கள் விற்பனை செய்வதால், தமிழகத்துக்கு பாதிப்பு என தொழில்துறையினர் குற்றம்சாட்டுகின்றனரே?
ஜி.எஸ்.டி., சார்ந்து என்னால் நடவடிக்கை எடுக்க முடியும். சட்டவிரோத நடவடிக்கைகளை மாநில அரசுதான் தடுக்க வேண்டும். அது எந்த மாநில அரசாக இருந்தாலும் சரி. கோவில்பட்டி, சிவகாசி பகுதியில் தீப்பெட்டி தொழிலுக்கு, சீன மலிவு லைட்டர் இறக்குமதியால் பிரச்னை என்றார்கள். அதற்கு கலால் வரி விதித்தோம். அதன்பிறகும் பிரச்னை என்றார்கள். இறக்குமதி செய்வதை, துறைமுகத்தில் தடுத்து நிறுத்தினோம். கள்ளமார்க்கெட்டில் சரக்கு கொண்டு வந்தால், தடுக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகள்தான்.
பம்ப் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை, மத்திய மாநில அரசு அதிகாரிகள் இணைந்த பிட்மென்ட் கமிட்டி மற்றும் லீகல் கமிட்டி பரிசீலிக்கும். அதன் பிறகு, அமைச்சர் குழுவுக்கு வரும். அங்கு இதுகுறித்த முடிவு எட்டப்படும்.
பி.எம்.கிசான் திட்டத்தில் ஏராளமான தமிழக விவசாயிகள் விடுபட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளதே?
பயனாளிகள் பட்டியலை மாநில அரசுதான் தர வேண்டும். அவ்வாறு விடுபட்டிருந்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க, வேளாண் துறை அமைச்சரிடம் பேசுகிறேன். கிசான் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவது குறித்தும் துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வரும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறித்து?
ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல் டீசல் ஏற்கனவே உள்ளது. ஜி.எஸ்.டி., அமல் செய்யும்போதே, பெட்ரோல், டீசலுக்கு 'எனாபிளிங் புரவிசன்' கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டு, எவ்வளவு வரி விதிப்பு என்பதை முடிவு செய்தால், உடனடியாக, அமல் செய்யப்படும். மத்திய அரசு தரப்பில் எவ்வித தாமதமும் இல்லை. மாநிலங்கள் ஒப்புக்கொண்டால், அமல்படுத்தப்படும். எனக்குத் தெரிந்தவரையில், எந்த மாநிலமும் முன்வருவதாகத் தெரியவில்லை.
கோவை ஏற்றுமதி சார்ந்து அதிகம் இருக்கும் நிலையில் தொழில் நலிவடைந்து வருகிறது. சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படுமா?
உலகளாவிய நிலையில் மந்த நிலை நிலவுகிறது அல்லது வேறு ஏதேனும் காரணத்தால், ஒரு குறிப்பிட்ட தொழில் பாதிக்கப்படுகிறது எனில், அதற்குத் தீர்வு காண முடியும். துறைவாரியாக பிரச்னைகளை அந்தத்துறைகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்க்கலாம். நிதியமைச்சரால் எல்லா பிரிவுக்கும் தீர்வு தந்துவிட முடியாது. ஒவ்வொரு துறைக்கும் அமைச்சகம் உண்டு. அந்தத் துறை சார்ந்து பரிந்துரைகள் வந்தால், உதவுவதற்கு நிச்சயம் தயாராகவே இருக்கிறோம்.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்து?
மாநிலத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான முதல்வரின் அனைத்து முயற்சிகளையும் வரவேற்கிறேன். அவர் மேற்கொள்ளட்டுமே. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாவது, உறுதி கொடுப்பது இவை நடக்கும். எல்லா மாநிலங்களும் இதைத்தான் செய்யும். எந்த அளவுக்கு நிறைவேறுகிறது என்பதைப் பிறகு பார்க்கலாம்.
கோவைக்கு பொதுத்துறை தொழில் நிறுவனம் அமைக்கப்படுமா?
கோரிக்கை வந்துள்ளது. பார்க்கலாம்.
![]() |
கோவை விமான நிலையம், விரிவாக்கத்துக்குப் பின் தனியாருக்கு தரப்படுமா?
அதை விமானப் போக்குவரத்து அமைச்சகம்தான் முடிவு செய்யும். கோவை பெரும் தொழில்நகரம். விமான நிலைய விரிவாக்கம் முக்கியம். இதை நிச்சயம் தொடர்ந்து கவனிப்பேன். பா.ஜ., கொடுத்துள்ள ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியையும் நிச்சயம் நிறைவேற்றும்.
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படுவதாக புகார்கள் உள்ளனவே?
இது தவறான தகவல். ஏழைகள் பயன்படுத்தும் ஜன்தன் கணக்கு, நடப்புக் கணக்கு, சேமிப்புக் கணக்கு இது எதற்கும், குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் அபராதம் விதிக்கப்படாது. அவ்வாறு இருப்பின் புகார் தெரிவிக்கலாம். ஏழைகளிடம் இருந்து இவ்வாறு பணம் வசூலிக்கும் திட்டம் ஒருபோதும் இருந்ததில்லை.
மணிப்பூர் கலவரம் குறித்து கடும் விமர்சனங்கள் வருகின்றனவே...
மணிப்பூரில் இதற்கு முன்பு கலவரம் நடந்தபோது, எத்தனை காங்., அமைச்சர்கள் அங்கு சென்றனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து அனைத்து தரப்பையும் சந்தித்தார். பிரதமர் பார்லி.,யில் பதில் சொல்ல வந்தபோது, எங்கு உண்மை தெரிந்துவிடுமோ என, கத்திக் கூச்சலிட்டனர்.
மிசோரமில் வன்முறை வெடித்தபோது, நமது ராணுவத்தை வைத்து சொந்த மக்களை சுட்டுக்கொன்ற காங்.,க்கு ஜனநாயகம் பற்றிப் பேச என்ன அருகதை உள்ளது. பஞ்சாப் கலவரத்துக்கு உங்கள் குடும்பத்தினர் மன்னிப்புக் கேட்காமல், அதே சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங்கை வைத்து மன்னிப்புக் கேட்டவர்கள், இதைப்பற்றிப் பேசலாமா.
ராகுல் வெளிநாட்டில் இருந்தபடி விமர்சிப்பது குறித்து...
பிரதமரை, பா.ஜ.,வை, அரசின் கொள்கைகளை விமர்சிக்கலாம் தவறில்லை. ஆனால், பாரத தேசத்தின் விரோதிகளை ஒவ்வொருவராக சந்தித்துப் பேசுவது சரியா. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு ஆதரவான பெண் எம்.பி.,யைச் சந்தித்துப் பேசுகிறார்.
கனிஷ்கா விமானத்தைக் குண்டுவைத்து தகர்த்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ராகுல் பேசுகிறார். அந்த பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்காமல் காப்பாற்றி வைத்திருக்கிறது காங்.
சீக்கியர்கள் இந்தியாவில் பாதுகாப்பாகவே இருக்கின்றனர். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை முன்னின்று நடத்தியவர் மீது வழக்குகூட தொடரவில்லை. மோடி பிரதமரான பிறகே வழக்குத் தொடர நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு தனிநபராக இவ்வாறு செயல்படுவதே தவறு. ஆனால், பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட வேண்டியவர் இவ்வாறு செயல்படுவதை, காங்., ஒப்புக்கொள்கிறதா. இது ஏற்புடையதா என்பதை காங்., சொல்லட்டும். உங்கள் தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர் சீனாவுடன் ஒப்பந்தம் போடுகிறார். நாட்டுக்கு விரோதமானவர்களைச் சந்திக்கிறார்.
இதைத் தட்டிக் கேட்டும் தேசபக்தி தி.மு.க.,வுக்கு இல்லையா. இவ்வாறு, நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.