பழனிசாமியை நம்பி போகாதீங்க அண்ணாமலையை மாற்றாதீங்க; அமித் ஷாவுக்கு பறக்கும் 'இ - மெயில்'கள்
பழனிசாமியை நம்பி போகாதீங்க அண்ணாமலையை மாற்றாதீங்க; அமித் ஷாவுக்கு பறக்கும் 'இ - மெயில்'கள்
UPDATED : ஏப் 03, 2025 03:41 AM
ADDED : ஏப் 02, 2025 07:57 PM

'சட்டசபை தேர்தல் வரைக்கும், தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிக்க வேண்டும்' என, அவரது ஆதரவாளர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, இ - மெயில் அனுப்பி வருகின்றனர்.
வரும் 6ம் தேதி, பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவர் வந்து சென்றதும், பா.ஜ.,வில் 14 மாநில தலைவர்கள் மாற்றப்பட உள்ளனர். அதில் அண்ணாமலை இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அவரை மாற்றக்கூடாது, தமிழகம் முழுதும் உள்ள அவரது ஆதரவாளர்கள், இ - மெயில் வாயிலாக, அமித் ஷாவை வலியுறுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில், 'அண்ணாமலை ஆர்மி' என்ற பெயரிலும், அவர்கள் அமித் ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
'இ - மெயில்' கடிதங்களில், அவர்கள் கூறியுள்ளதாவது:
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தே.ஜ., கூட்டணிக்கு, 18 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்தன. வரும் சட்டசபை தேர்தலில், இந்த ஓட்டு சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்றால், அதற்கு மாநில தலைவர் பதவியில், அண்ணாமலை நீடிக்க வேண்டும்.
புதிய தலைவரை நியமித்தால், லோக்சபா தேர்தலில் வாங்கிய 18 சதவீதம் ஓட்டுக்கள் குறைந்து, வேறு கட்சிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
தி.மு.க., அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலை முன்னெடுக்கும் அரசியலுக்கு வரவேற்பு கிடைத்து வருவதால், பா.ஜ.,வின் ஓட்டு வங்கியும் அதிகரித்து வருகிறது.
டில்லியில் அமித் ஷாவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது கூட்டணி குறித்தே பேசியுள்ளார். ஆனால், அடுத்த நாளே, 'கூட்டணி பற்றி பேசவில்லை' என மறுத்தார்.
அதேபோல் தான், 2024 லோக்சபா தேர்தலுக்கு முன், டில்லியில் நடந்த தே.ஜ., கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில், பிரதமர் மோடி அருகில் பழனிசாமி அமர்ந்தார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் அமையும் என்றும், தே.ஜ., கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அப்போது பழனிசாமி சொன்னார்.
தமிழகம் திரும்பியதும், பா.ஜ.,வுக்கு 6 தொகுதிகள் தான் ஒதுக்கீடு செய்ய முடியும் என அவமதித்தார். பா.ஜ.,வை அழைக்காமல், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைத்தார். அதனால், பழனிசாமியை நம்பி, அண்ணாமலையை மாற்ற வேண்டாம். சட்டசபை தேர்தல் நேரத்தில், பா.ஜ., கூட்டணியை கழற்றி விட்டு, த.வெ.க., நாம் தமிழர் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் வாய்ப்புள்ளது.
அதனால், அண்ணாமலையை மாற்றும் முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு கடிதங்களில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -