ரூ.21 ஆயிரம் செலுத்தினால் மாதம் ரூ.12 லட்சம் வருவாய்! நிதியமைச்சர் பெயரில் மோசடி முயற்சி
ரூ.21 ஆயிரம் செலுத்தினால் மாதம் ரூ.12 லட்சம் வருவாய்! நிதியமைச்சர் பெயரில் மோசடி முயற்சி
ADDED : ஜன 23, 2025 12:13 AM

கோவை : ரூ.21 ஆயிரம் கட்டினால், மாதம் ரூ.12 லட்சம் வருவாய் ஈட்டலாம் என, மத்திய நிதியமைச்சர், ஆர்.பி.ஐ., முன்னாள் கவர்னர், தொழிலதிபர் அம்பானி பெயரில் சமூக வலைத்தளங்களில் புதிய மோசடி முயற்சி நடந்து வருகிறது.
ஆன்லைனில் விதவிதமான சைபர் குற்றங்கள் நடக்கின்றன. அந்த வகையில், புதிய மோசடி அரங்கேறி வருகிறது. சமூக வலைத்தளங்களில் வரும் வீடியோவில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகின்றனர்.
அதில், குறைந்தபட்ச முதலீடாக ரூ.21 ஆயிரம் செலுத்தினால் மாதம் ரூ. 12 லட்சம் வருவாய் ஈட்டலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசு இதனை, சாமானிய மக்களிடம் இருந்து மறைத்து வைத்திருப்பதாக ஒரு வீடியோவிலும், ரிசர்வ் வங்கி, அனைத்து மக்களையும் பணக்காரர்களாக மாற்ற இத்திட்டத்தை வகுத்திருப்பதாக, மற்றொரு வீடியோவிலும் தெரிவிக்கின்றனர்.
போலியாக உருவாக்கப்பட்ட இந்த வீடியோவில், பேசுபவர்களின் குரல் தொழில்நுட்பத்தின் வாயிலாக, அவர்களுடையதைப் போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது.
'இம்மீடியட் கனெக்ட்' என்ற தளத்தில், நமது விவரங்களைக் கொடுத்து, பணம் கட்டினால், சில நாட்களிலேயே 14 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டப்பட்டு, மாதம் ரூ. 12 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த இணைப்பை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே வழங்கியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசே இத்திட்டத்தைச் செயல்படுத்துவதாக, நிர்மலா சீதாராமன் பேசும் வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பேஸ்புக்கில்தான் இவ்வகை வீடியோக்கள் அதிகம் உலவுகின்றன. பொதுமக்கள் இதுபோன்ற முறைகேடுகளில் சிக்காமல், உஷாராக இருப்பது நல்லது.

