கோவையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! நில அதிர்வு பதிவு மையம் துவக்கம்
கோவையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு! நில அதிர்வு பதிவு மையம் துவக்கம்
ADDED : டிச 09, 2024 05:47 AM

கோவை: நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், கோவை மூன்றாவது பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், நில அதிர்வை பதிவு செய்யும் மையம், கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டது.
நில அதிர்வுகள் மற்றும் நிலநடுக்கத்தை மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நிலநடுக்கவியல் மையம்(என்.சி.எஸ்.,) கண்டறிந்து வருகிறது. நில அதிர்வு மற்றும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து, அங்கு அதற்கான புதிய கருவிகளை மையம் பொருத்தி வருகிறது.
தமிழகத்தில் இதுபோன்று சென்னை, கொடைக்கானல், சேலம் மாவட்டங்களில் ஏற்கனவே நில அதிர்வு மற்றும் நிலநடுக்கத்தை கண்டறிவதற்கான மையங்கள், செயல்பட்டு வருகின்றன.
கருவிகளில் இருந்து பெறப்படும் நில அதிர்வு அளவீடுகள், டில்லியில் உள்ள என்.சி.எஸ்., ன் தலைமையகத்தில் பெறப்படும். நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் பிரிவு, 2 மற்றும், 3 என, வகைப்படுத்தப்பட்டு, அங்கு கருவிகள் பொருத்தப்படும்.
நில அதிர்வு மற்றும் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகளில், கோவை மூன்றாவது பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, என்.சி.எஸ்., சார்பில், பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் நில அதிர்வு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டது.
புதிதாக நிறுவப்பட்டுள்ள மையத்தில், டிஜிட்டல் சீஸ்மோமீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் பிராந்திய மிகக்குறைந்த அளவிலான அதாவது, 1.0 முதல், 3.0 அளவிலான பூகம்பங்களை பதிவு செய்ய முடியும்.