உயிரியல் பூங்கா, வன உயிரின சரணாலயங்களுக்கு சூழலியல் குழு
உயிரியல் பூங்கா, வன உயிரின சரணாலயங்களுக்கு சூழலியல் குழு
UPDATED : நவ 21, 2024 04:35 AM
ADDED : நவ 21, 2024 01:17 AM

சென்னை:வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு வளர்ச்சி குழு, திருநெல்வேலி, கங்கைகொண்டான் வன உயிரின சரணாலயங்களுக்கு, சூழலியல் பகுதி கண்காணிப்புக் குழு அமைத்து, வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை, வண்டலுார் உயிரியல் பூங்காவில், நீடித்த வளர்ச்சிக்கான குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வனத்துறையின் பரிந்துரை அடிப்படையில், தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.
![]() |
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் தலைமையில், தொழில் துறை செயலர், வனத் துறை தலைவர், தலைமை வன உயிரின பாதுகாவலர், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், சுற்றுச்சூழல் துறை இயக்குனர், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட, 10 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
வண்டலுார் உயிரியல் பூங்கா இயக்குனர், இக்குழுவின் உறுப்பினர் செயலராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில், கங்கைகொண்டான் புள்ளி மான் சரணாலயம் உள்ளது.
கடந்த, 2013ல், அறிவிக்கப்பட்ட இந்த சரணாலயம், 288 சதுர கி.மீ., பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இந்த சரணாலயத்துக்கு வெளியில், சூழலியல் முக்கியத்துவ பகுதி வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி கலெக்டர் தலைமையில், 10 பேர் அடங்கிய இக்குழுவில், மாவட்ட வன அலுவலர் உறுப்பினர் செயலராக இருப்பார் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, நெல்லை வன உயிரின சரணாலயம், 1988 முதல் செயல்பட்டு வருகிறது.
இது, 817 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்து உள்ளது. இந்த சரணாலயத்துக்கு சூழலியல் முக்கியத்துவ பகுதி வரையறுக்கப்பட்டு உள்ளது. இங்கு வளர்ச்சி பணிகளை நெறிப்படுத்த, கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் தலைமையிலான இக்குழுவில், 10 பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட வன அலுவலர், இதன் உறுப்பினர் செயலராக இருப்பார் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


