மலைப்பகுதி ஆசிரியர் இடமாறுதலில் கல்வி அதிகாரிகள் 'தில்லுமுல்லு'
மலைப்பகுதி ஆசிரியர் இடமாறுதலில் கல்வி அதிகாரிகள் 'தில்லுமுல்லு'
UPDATED : செப் 12, 2025 01:19 AM
ADDED : செப் 11, 2025 11:55 PM

பள்ளிக்கல்வித் துறையின் கீழ், மலைப்பகுதிகளில் இயங்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்வதில், அதிகாரிகள் முறைகேடில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், நீலகிரி, கிருஷ்ணகிரி, வேலுார், ஈரோடு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மலைப்பகுதி பள்ளிகள் உள்ளன.
மற்ற பள்ளிகளை ஒப்பிடும்போது, அவற்றுக்கான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் குறைவு என்பதால், அப்பள்ளிகளில் பணியாற்ற, ஆசிரியர்கள் முன்வருவதில்லை.
எனவே, அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி போன்ற சில மாவட்டங்களில், பகுதியளவு மலையாகவும், பகுதியளவு சமவெளியாகவும் உள்ளன.
இந்நிலையில், சலுகைகளை பெறுவதற்காக, மலைப் பகுதிகளுக்கு இடமாறுதல் பெற, சில ஆசிரியர்கள் முன்வருகின்றனர்.
ஆனால், அவர்கள் அப்பள்ளிகளுக்கு செல்லாமல், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களிடம் சிறப்பு அனுமதி பெற்று, சமவெளிப் பகுதி பள்ளிகளில் பணி புரிகின்றனர்.
அதேநேரம், மலைப்பகுதிகளில் காலிப்பணியிடங்கள் காட்டப்படுவதில்லை. இதனால், பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, ஓசூர், கிருஷ்ணகிரி என, இரண்டு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஓசூர் கல்வி மாவட்டத்தில், தளி, கெலமங்கலம், ஓசூர், சூளகிரி ஒன்றியங்கள் உள்ளன.
கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில், காவேரிப்பட்டணம், பர்கூர், மத்துார், வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை ஒன்றியங்கள் உள்ளன.
ஓசூர் கல்வி மாவட்டத்தி ல் உள்ள ஒன்றியங்கள், மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன. இதனால், இப்பகுதிகளில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மலைப் படியாக மாதம் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
இதை பெறுவதற்காக, இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள், அப்பகுதிகளை தேர்வு செய்கின்றனர்.
ஒரு சில மாதங்களில், மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகளை சந்தித்து, சிறப்பு அனுமதி பெற்று, தங்களின் வசிப்பிடத்துக்கு அருகில், ஏற்கனவே அதிக ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகள் அல்லது மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, மாற்றுப்பணி பெறுகின்றனர்.
இதற்காக, தாங்கள் பெறும் சிறப்பு படியில் பாதியை அதிகாரிகளுக்கு தருகின்றனர்.
இதுபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கடந்த ஐந்தாண்டுகளில், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இவ்வாறு முறைகேடில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அரசின் சார்பில் வழங்கப்பட்ட சிறப்பு படி மட்டுமே, 4 கோடி ரூபாய்க்கு மேல் வீணாகி உள்ளது. இதுபோல், மற்ற மாவட்ட பள்ளிகளையும் சேர்த்தால், பல நுாறு கோடி ரூபாய் வீணாகி இருக்கும்.
இவர்களை போன்ற ஆசிரியர்களை, பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்த, மலைப்பகுதி பள்ளி தலைமை ஆசிரியர்களால் முடிவதில்லை. அவர்கள், பள்ளி மேலாண்மை குழு சார்பில், அனுபவம் இல்லாத ஆசிரியர்களை நியமிக்கின்றனர்.
இதனால், மலைப்பகுதி பள்ளிகள், கல்வியில் பின்தங்குவதுடன், மாணவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது.
இது போன்ற முறைகேடில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மலைப்பகுதிகளுக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குவதையும் தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -