இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி: ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி: ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
ADDED : செப் 12, 2025 02:31 AM

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக்கோரிய மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை, 'டி - 20' கிரிக்கெட் போட்டி, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 9ம் தேதி துவங்கி, இம்மாதம் 28 வரை நடக்கிறது.
இதில், இந்தியா - பாக்., இடையிலான போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ளது.
இந்நிலையில், ஊர்வசி ஜெயின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பெதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன் விபரம்:
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
நம் ராணுவம் நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது வீரர்கள் பலர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.
இது போன்ற நேரத்தில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கு ம் நாடான பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.
இது தேச நலனுக்கு எதிரானது. எனவே, செப்., 14ல் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
அவசர வழக்கு 'இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் பிஷ்ணோய் அமர்வு முன் மனுதாரர்கள் சார்பில் நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 'வரும் ஞாயிறு அன்று போட்டி நடக்கவுள்ளது. இந்த நேரத்தில் நாங்கள் என்ன செய்ய முடியும்? இது விளையாட்டு போட்டி தானே; அது நடக்கட்டும். இதை அவசர வழக்காக விசாரிக்க முடியாது' என தெரிவித்தனர்.
- டில்லி சிறப்பு நிருபர் -