உலகில் எங்கு சென்றாலும் ஹிந்து கலாசாரத்தை பின்பற்றுங்கள்: பக்தர்களுக்கு சிருங்கேரி சன்னிதானம் அருளுரை
உலகில் எங்கு சென்றாலும் ஹிந்து கலாசாரத்தை பின்பற்றுங்கள்: பக்தர்களுக்கு சிருங்கேரி சன்னிதானம் அருளுரை
ADDED : நவ 04, 2024 04:13 AM

சென்னை: ''உலகில் எங்கு சென்றாலும், ஹிந்து கலாசாரத்தையும், சம்பிரதாயத்தையும் விடாமல் பின்பற்ற வேண்டும்,'' என, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகள் தெரிவித்தார்.
சென்னையில் விஜய யாத்திரையின் ஏழாவது நாளான நேற்று, மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்தில், பக்தர்கள் மத்தியில் சன்னிதானம் வழங்கிய அருளுரை:
பல நுாற்றாண்டுகளுக்கு முன், மக்களுக்கு சில உபயோகமான நல்ல விஷயங்களை சொல்ல ஒருவர் முயற்சித்தார். நல்ல விஷயங்களை யாருக்கு சொல்வது என்ற கேள்வி அவருக்கு எழுந்தது.
பண்டிதர்களிடம் சொல்லலாம் என்று முடிவு செய்து, முதலில் அவர்களிடம் சென்றார். அவர்களோ, 'நாங்களே பண்டிதர்கள். எங்களுக்கு தெரியாத நல்ல விஷயங்களாக உங்களுக்கு தெரியும்' எனக்கூறி, கேட்க மறுத்து விட்டனர்.
பெரும் பாக்கியம்
அடுத்து, அதிகாரம் மிக்க பதவியில் இருப்பவர்களிடம் சென்றார். சந்திக்கவே அவர்கள் அனுமதிக்கவில்லை. அதனால், பொதுமக்களிடம் சென்று பேசினார். அதைக்கேட்ட மக்கள், 'நீங்கள் சொல்வது நல்ல விஷயம் என்பது தெரிகிறது. ஆனால், நீங்கள் பேசுவது புரியவில்லை' எனக்கூறி சென்று விட்டனர்.
நல்ல விஷயங்களை நான்கு பேருக்கு சொல்ல முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். கடைசியாக, 'யார் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, சொல்லி விடுவோம். வேண்டுவோர் எடுத்துக் கொள்ளட்டும்' என்று நினைத்து, பொதுவில் சொல்லி விட்டார். அவர்தான் பர்த்துரு ஹரி.
அவர் இயற்றிய 'நீதி சதகம், வைராக்கிய சதகம்' ஆகிய நுால்களில், மனிதன் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கூறியிருக்கிறார். நல்ல விஷயங்களை சொல்ல நினைக்கும் அனைவருக்கும் இதே அனுபவம்தான் கிடைக்கும். பர்த்துரு ஹரி இன்று இருந்திருந்தால், அவர் சொல்வதை திரித்து பொய் பிரசாரம் செய்திருப்பார்கள்.
வாழ்க்கைக்கு நல்ல வாழ்க்கையை காட்டுபவர் அபூர்வமாக சிலர் தான் இருப்பார்கள். தீய விஷயங்களை சொல்பவர்கள் அதிகம் இருப்பார்கள். எனவே, நல்ல விஷயங்களை சொல்லும்போது, அதைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.
மனிதன் தன் வாழ்க்கையிலும், மற்றவர்கள் வாழ்க்கையிலும் எப்படி இருக்க வேண்டும். மனிதனுக்கு பிரச்னைகள் ஏன் வருகிறது, வராமல் இருக்க என்ன செய்வது என்பதையெல்லாம், ஸ்ரீஆதிசங்கரர்தன் கிரந்தங்களில் கூறியிருக்கிறார்.
ஞானம் என்பது கடல் போன்றது. படிப்புக்கு எல்லை இல்லை. படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதனால்தான், குழந்தை பருவத்திலேயே கல்வி கற்பிப்பதை துவங்குகிறோம். நோயின்றி வாழ்வது பெரும் பாக்கியம்.
மனிதர்கள் என்றால் நோய் வரத்தான் செய்யும். நோய் வந்தால் மருத்துவம் பார்த்து சரி செய்ய வேண்டும். எனவே, படிப்புக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் தானம் செய்ய வேண்டும்; கல்வி, மருத்துவம், தானம் செய்வது ஆகிய மூன்றையும் மனிதன் பின்பற்ற வேண்டும் என, ஸ்ரீஆதிசங்கரர் கூறியிருக்கிறார்.
விடுபட வழி
உலகில் எங்கு சென்றாலும் நோய், அகங்காரம், துன்பம் ஆகிய மூன்றும் இருக்கத்தான் செய்யும். இந்த மூன்றிலிருந்து விடுபடுவதற்கான வழியை, ஸ்ரீஆதிசங்கரர் காட்டியுள்ளார். அவர் அருளிய அத்வைத தத்துவத்தில் அனைத்திலும் வழிகள் உள்ளன.
கண் தெரியாமல் இருந்தாலும், நல்ல விஷயங்கள் சொன்னால், காதால் கேட்டு புரிந்துகொண்டு நடந்தால், அவரை பார்வையற்றவர் என்று சொல்ல முடியாது.
தவறு என்று தெரிந்தும் ஒன்றை பிடிவாதமாக, இப்படி தான் செய்வேன் என்று செய்பவர்தான் உண்மையிலேயே பார்வையற்றவர்.
காது கேட்காத ஒருவர், நல்ல விஷயங்களை எழுதிக் காட்டும்போது புரிந்து கொண்டால், அவர் காது கேட்கும் திறன் அற்றவர் அல்ல. நல்ல விஷயம் என்று தெரிந்தும் அதை கேட்க மறுப்பவரே காது கேட்கும் திறன் அற்றவர்.
அதுபோல, பேச தெரிந்தும், பேச வேண்டிய நேரத்தில் வேண்டுமென்றே பேசாமல் இருப்பவரே பேசும் திறனற்றவர்.
இது, ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். அத்வைதம் போன்ற தத்துவங்கள், மக்களுக்கான நீதி போதனைகளை இரண்டையும் உபதேசித்தவர் ஸ்ரீஆதிசங்கரர் மட்டுமே.
இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு, ஸ்ரீஆதிசங்கரர் காட்டிய வழியில் சென்று, இந்த வாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த தத்துவங்களை எல்லாம் வெளிநாட்டினர் இங்கே வந்து கற்றுக் கொண்டு, அவர்களது மொழியில் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். நம்மவர்கள் அதை படித்து விட்டு வியக்கின்றனர். அவை நம் கிரந்தங்களில் உள்ளதுதான் என்பது தெரிவதில்லை. இது, இன்று பெரும் பிரச்னையாக இருக்கிறது.
வெளிநாட்டிற்கு படிப்பு, வேலைக்காக செல்பவர்கள், நம் சம்பிரதாயங்களை தவறாமல் செய்ய வேண்டும். வெளிநாட்டினர் தவறாக நினைப்பார்களே என, செய்யாமல் இருக்க கூடாது.
நாம் செய்ய ஆரம்பித்தால், இவ்வளவு தொலைவு வந்த பிறகும் கலாசாரத்தை விடாமல் இருக்கிறாரே என, நம் மீதான மதிப்பு அதிகமாகும்.
உலகில் எங்கே சென்றாலும் நம் ஹிந்து கலாசாரத்தை விட்டு விடக் கூடாது. குறை சொல்பவர்களை பற்றி கவலைபடக் கூடாது. நம் செய்ய வேண்டிய கடமையை தொடர்ந்து செய்ய வேண்டும். நல்ல விஷயங்களை யார் சொன்னாலும், அவர் வெளிநாட்டினராக இருந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஹிந்து தர்மத்தை பற்றி தெரிந்து கொள்ள அதிகம் படிக்க வேண்டும். சனாதன தர்மத்தில் நன்றாக புரிந்து கொண்டு, அதில் உறுதியாக இருக்க வேண்டும். அதை குழந்தைகளுக்கும் சொல்லித்தர வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் சொத்து.
இவ்வாறு சன்னிதானம் அருளுரை வழங்கினார்.