ADDED : நவ 08, 2025 01:23 AM

தஞ்சாவூர்: நகராட்சி நிர்வாக துறையில், அலுவலர் மட்ட பணி நியமனத்தில், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யுமாறும் தமிழக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
இதனால், அத்துறை அமைச்சரான நேருவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆலோசனை இந்த விவகாரம் பூதாகரமாகி, பதவிக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்பதற்காக, சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு சென்று அமைச்சர் நேரு வழிபட்டார்.
இந்நிலையில், தஞ்சாவூரில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், நேற்று நடந்த வாக்குச்சாவடி முகவர்கள், பூத் டிஜிட்டல் ஏஜன்ட் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், “பா.ஜ., வெற்றி பெற முடியாது என்ற நிலையில், கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் ஓட்டு திருட்டு.
''அடிமைகளை கையில் வைத்துக் கொண்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்கள் நம்மை வீழ்த்த நினைக்கின்றனர்.
''இந்தியாவில் பிரதமரையே எதிர்க்கும் துணிவு, வேறு எந்த மாநில முதல்வருக்கும் இல்லை.
வெற்றிக்கனி ''பல அரசியல் கட்சிகளும் பா.ஜ.,வுக்கு அடிபணிந்த நிலையில், 'மாநில உரிமையை கட்டிக் காப்போம்' என பிரதமரையே எதிர்த்து வெற்றிக்கனி பறிப்பவர், முதல்வர் ஸ்டாலின்,” என்றார்.
பா.ஜ., மோடி, அமித் ஷா என அமைச்சர் செழியன் வெளுத்து வாங்கிய நிலையில், பா.ஜ., மற்றும் மோடிக்கு எதிராக அமைச்சர் நேரு, எதுவும் பேசவில்லை.
நேரு பேசும்போது, “வாக்காளர் பட்டியலில், சிறுபான்மையினர் ஓட்டுகளை விடுபடாமல் சேர்க்க வேண்டும். சிறுபான்மையினர் ஓட்டு அனைத்தும், தி.மு.,க.,வுக்கான ஓட்டுகள்.
''ஆவணங்கள் இல்லாமல் பிற மாநில வாக்காளர்களை சேர்க்க அனுமதிக்கக்கூடாது. கட்சியினர், கண்ணும் கருத்துமாக செயல்பட்டு, தி.மு.க.,வை இரண்டாவது முறையாக வெற்றி பெற செய்ய வேண்டும்,” என்றார்.
'அமலாக்கத் துறையின் நெருக்கடியால், அமைச்சர் நேரு அமைதியாகி விட்டார்' என, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர் கூறினர்.

