அமலாக்கத்துறை சோதனையால் அச்சம்: 3 மணல் குவாரிகள் மட்டுமே இயக்கம்
அமலாக்கத்துறை சோதனையால் அச்சம்: 3 மணல் குவாரிகள் மட்டுமே இயக்கம்
UPDATED : மார் 01, 2024 03:30 PM
ADDED : மார் 01, 2024 02:16 AM

சென்னை: அமலாக்கத் துறை 'ரெய்டு' காரணமாக, ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டுவதால், மூன்று குவாரிகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால், தமிழகத்தில் மணல் தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் மணலுக்கு மாற்றாக, 'எம் - சாண்ட்' விற்பனை ஊக்கப்படுத்தப்பட்டது. இருப்பினும், பூச்சு உள்ளிட்ட சில கட்டுமான பணிகளுக்கு ஆற்று மணல் பயன்படுத்தப்பட்டது.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அரசின் வருவாயை அதிகரிக்க, மணல் குவாரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 2023ல் நீர்வளத் துறை வாயிலாக, 30க்கும் மேற்பட்ட இடங்களில் குவாரிகள் திறக்கப்பட்டன.
இங்கு மணல் அள்ளி விற்பனை செய்வதற்கு, மூன்று ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இவர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும், அதிக மணல் எடுத்து விற்பனை செய்தனர். இதன் வாயிலாக சட்டவிரோத பணப் பரிமாற்றமும் நடந்தது.அது தொடர்பான புகாரில், குவாரிகள் மற்றும் தொடர்புடைய ஒப்பந்ததாரர் வீடுகளில், அமலாக்கத் துறை அதிகாரிகள் 'ரெய்டு' நடத்தினர்; ஒப்பந்ததாரர்களின், 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
இது தொடர்பான வழக்கில், மாவட்ட கலெக்டர்களும் ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது. அமலாக்கத் துறை சோதனை, விசாரணை காரணமாக, ஆளும் கட்சியினர் மட்டுமின்றி, எதிர்க்கட்சியினரும், குவாரிகளை நடத்த தயங்குகின்றனர்.இதனால், டெல்டா மாவட்டங்களில் மூன்று குவாரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.புதிய குவாரிகளை நடத்த, நீர்வளத் துறை வாயிலாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் ஆர்வம் காட்டாததால், அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இதனால், மணல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

