அ.தி.மு.க.,வில் கூடுதல் மாவட்டங்கள் ஏற்படுத்த இ.பி.எஸ்., திட்டம்; விசுவாசிகளுக்கு பதவி தர முடிவு
அ.தி.மு.க.,வில் கூடுதல் மாவட்டங்கள் ஏற்படுத்த இ.பி.எஸ்., திட்டம்; விசுவாசிகளுக்கு பதவி தர முடிவு
ADDED : ஆக 10, 2025 06:13 AM

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வகையில், கட்சியில் உள்ள 82 மாவட்டங்களை 117 மாவட்டங்களாக அதிகரித்து தன் ஆதரவாளர்களை மாவட்டச் செயலர்களாக்க, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க.,வில் தற்போதுள்ள 90 சதவீதம் மாவட்டச் செயலர்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள்.
பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட பின், இவர்களை தன் கட்டுக்குள் வைத்திருக்க அமைப்புச்செயலர் உள்ளிட்ட பதவிகளை கூடுதலாக பழனிசாமி வழங்கினார்.
தற்போது அ.தி.மு.க.,வில், 82 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகபட்சம் மூன்று செயலர்கள் வரை உள்ளனர். இவர்கள் 'சீனியர்கள்' என்பதால், அவர்களிடம் ஓரளவு மட்டுமே பழனிசாமியால் அதிகாரம் செலுத்த முடிகிறது.
இது கட்சி வளர்ச்சியை பாதிக்கும் என உணர்ந்த அவர், ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதலாக இரண்டு மாவட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளார். தற்போதுள்ள 82 மாவட்டங்களை 117 மாவட்டங்களாக அதிகரித்து, அதில் தன் ஆதரவாளர்களை மாவட்டச் செயலராக்க உள்ளார்.
'டார்கெட்' அ.தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
மாவட்டச் செயலர்களில் பெரும்பாலானோர் சீனியர்கள் என்பதால், அவர்கள் களப்பணிக்கு செல்வதில்லை; கட்சி கூட்டங்களில் மட்டுமே பங்கேற்கின்றனர்.
ஜெயலலிதா இருந்தபோது இருந்த வேகம், உழைப்பு இப்போது அவர்களிடம் காணவில்லை. ஜெயலலிதா அமைச்சரவையில் மாவட்டச் செயலராக இருந்த அமைச்சர்களுடன், பழனிசாமியும் ஒரு அமைச்சராக இருந்தார்.
தற்போது அவர் கட்சியின் பொதுச்செயலர் என்ற முறையில் அதிகாரம் செலுத்த முயன்றாலும், அதை சீனியர்கள் விரும்பவில்லை.
இவர்களை வைத்து எதிர்பார்த்த அளவுக்கு கட்சிப் பணிகளை செய்ய முடியவில்லை என்றதும், இருக்கும் கட்சி மாவட்டங்களை பிரித்து, புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தி, அவற்றில் தன் ஆதரவாளர்களை நியமிக்கலாம் என முடிவெடுத்துள்ளார்.
நான்காம் கட்ட பயணம் உதாரணமாக மதுரையில் நகர், புறநகர் மேற்கு, கிழக்கு என மூன்று மாவட்டங்கள் உள்ளன. செயலராக உள்ள செல்லுார் ராஜு, உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோர் சீனியர்கள்.
இந்த மூன்று மாவட்டங்களை, ஐந்து மாவட்டங்களாக்கும்பட்சத்தில், தன் தீவிர விசுவாசிகளாக இருப்போரை, வசதி, மக்கள் செல்வாக்கு அடிப்படையில் நியமிக்கலாம். தன் நான்காம் கட்ட சுற்றுப்பயணத்திற்கு பின், கட்சியில் இந்த மாற்றங்களை ஏற்படுத்த, பழனிசாமி முடிவெடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -