ஈ.வெ.ரா., குடும்பத்துக்கு 9 முறை வாய்ப்பு: கட்சிக்காக உழைத்தோர் ஏமாறுவதாக கொதிப்பு
ஈ.வெ.ரா., குடும்பத்துக்கு 9 முறை வாய்ப்பு: கட்சிக்காக உழைத்தோர் ஏமாறுவதாக கொதிப்பு
ADDED : ஜன 10, 2025 05:13 AM

ஈரோடு : 'ஈ.வெ.ரா., குடும்பத்துக்கு இதுவரை, ஒன்பது தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டு, 10வது முறையும் முயல்வதால், கட்சிக்காக உழைத்தவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்' என, ஈரோடு காங்., மூத்த நிர்வாகிகள் குமுறுகின்றனர்.
இதுபற்றி அவர்கள் கூறியதாவது: ஈ.வெ.ரா., குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால், காங்., மற்றும் தி.மு.க., தலைமை அக்குடும்பத்தினரை பல நிலைகளில் ஆதரிக்கிறது. இதுவரை அவரது குடும்பத்தினர் ஒன்பது முறை தேர்தலில் போட்டியிட்டு, 4 முறை வென்றுள்ளனர்.
மறைந்த இளங்கோவன், 1984ல் சத்தியமங்கலம் எம்.எல்.ஏ.,வாக வென்றார். 1989ல் பவானிசாகர் சட்டசபை தொகுதியிலும், 1996ல் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியிலும் போட்டியிட்டு தோற்றார். கடந்த, 2004ல் கோபி எம்.பி.,யாக வென்று, மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சரானார்.
கடந்த, 2009ல் ஈரோட்டிலும் 2014ல் திருப்பூரிலும் 2019ல் தேனியிலும் லோக்சபா தொகுதிக்கும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த, 2021ல் ஈரோடு கிழக்கில் அவரது மகன் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ.,வானார். அவர் இறந்ததால், 2023ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட இளங்கோவனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு, அவர் எம்.எல்.ஏ.,வானார். இப்படி ஒன்பது தேர்தலில் அவரது குடும்பத்தினர், சட்டசபைக்கும் லோக்சபாவுக்கும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது, இளங்கோவன் மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கில் நடக்கவிருக்கும் சட்டசபை இடைத்தேர்தலில், 10வது முறையாக ஈ.வெ.ரா., குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு கேட்கின்றனர்.
அவருக்கு சீடு கொடுத்து, எம்.எல்.ஏ.,வாகி விட்டால், தொடர்ச்சியாகவும் அவரே போட்டியிடுவாரே தவிர, வேறு யாருக்கும் அங்கு போட்டியிட வாய்ப்பே கிடைக்காத சூழல் உருவாகும். எனவே, இம்முறை காங்., கட்சிக்காக ஆண்டாண்டு காலமாக உழைத்தவர்களில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என கட்சி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

