மாடு மேய்க்கும் சிறுவன் கூட அன்புமணி போல் பேச மாட்டான்: கோபத்தில் கொந்தளித்த ராமதாஸ்
மாடு மேய்க்கும் சிறுவன் கூட அன்புமணி போல் பேச மாட்டான்: கோபத்தில் கொந்தளித்த ராமதாஸ்
ADDED : அக் 17, 2025 01:18 AM

திண்டிவனம்: 'அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும். அது தான், அவருக்கும், அவரைசுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எனக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், மருத்துவ பரிசோதனைக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். அதில், எனக்கு எந்த குறையும் இல்லை என டாக்டர்கள் கூறினர்.
மருத்துவமனையில் இருந்த என்னை நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்தனர். புதிதாக துவங்கப்பட்ட கட்சியைத் தவிர, அனைத்து கட்சியினரும் என்னிடம் பேசி நலம் விசாரித்தனர்.
மருத்துவமனையில், நான் ஐ.சி.யூ.,விலும் இல்லை; ஐ.சி.யூ., வார்டுக்கும் போகவில்லை. ஆனால், 'ராமதாசுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் சும்மா விடமாட்டேன்; வேடிக்கை பார்க்க மாட்டேன்; தொலைத்து கட்டி விடுவேன்; ராமதாசை வைத்து நாடகம் ஆடுகின்றனர்' என, அன்புமணி கூறுகிறார்.
படிப்பறிவு இல்லாத, மாடு மேய்க்கும் சிறுவன் கூட, இப்படிப்பட்ட கேவலமான சொற்களை கொட்டி இருக்க மாட்டான். அன்புமணிக்கு தலைமைப் பண்புக்குரிய லட்சணம் எதுவும் இல்லை என, ஏற்கனவே நிர்வாக குழு கூட்டத்தில் கூறினேன். தற்போதைய அவரது மோசமான பேச்சு வாயிலாக, நான் கூறியது, உறுதியாகி விட்டது.
பா.ம.க.,வை துவக்கியதும் நான் தான்; அக்கட்சிக்கு சொந்தக்காரனும் நான் தான். வியர்வை சிந்தி இயக்கத்தை வளர்த்திருக்கிறேன். அதனால், அக்கட்சி என்னுடையது தான். எனவே, அந்த கட்சியை தன்னுடையது என அன்புமணி உரிமை கொண்டாட முடியாது. பா.ம.க.,வுக்கும், கொடிக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கட்சியையும், கொடியையும், சின்னத்தையும் காப்பாற்ற எந்த சட்ட எல்லைக்கும் சென்று போராடத் தயாராக இருக்கிறேன். தேர்தல் கமிஷன் வாயிலாகவும் போராடுவேன். கட்சி துவங்கும்போது இப்படி எல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது.
தேவையானால், அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும். அது தான், அன்புமணிக்கும் நல்லது. இதைத்தான், பிரச்னை துவங்கிய நாளில் இருந்து சொல்லி வருகிறேன்.
அவரைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அதுதான் நல்லது. புது கட்சி தொடங்கினால், பொறுப்புகள் தான் கிடைக்கும்; எம்.எல்.ஏ., - - எம்.பி., பதவி கிடைக்காது. அது ஒரு போலியான அமைப்பாகத்தான் இருக்கும்.
அன்புமணி உடன் இருப்போர், கட்சித் தொண்டர்கள் அல்ல; ஒரு கும்பல். அதை அப்படித்தான் குறிப்பிட வேண்டும். என் பெயரின் தலைப்பு எழுத்தை மட்டும் அன்புமணி பயன்படுத்தி கொள்ளலாம். வரும் டிசம்பரில் பொதுக்குழு கூடும். அதில் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும். இந்த முறை கூட்டணி சரியாக இருக்கும்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.