உதயநிதிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய தி.மு.க., முன்னாள் நிர்வாகி 'சஸ்பெண்ட்'
உதயநிதிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய தி.மு.க., முன்னாள் நிர்வாகி 'சஸ்பெண்ட்'
ADDED : அக் 16, 2025 01:55 AM

'தி.மு.க., முப்பெரும் விழா மேடையில், துணை முதல்வர் உதயநிதி அமர, இடம் ஒதுக்க வேண்டும்' என, போஸ்டர் ஒட்டிய, இளைஞர் அணியின் முன்னாள் நிர்வாகி சுரேஷ், கட்சியிலிருந்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
செப்., 17ம் தேதி, கரூரில், தி.மு.க., முப்பெரும் விழா நடந்தது. விழா மேடை முன் வரிசையில் உதய நிதியை அமர வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நுங்கை சுரேஷ் சென்னை நகரில் போஸ்டர் ஒட்டினார்.
அதில், 'ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில், தகுதியான, நடுநிலையான, வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமான நபர்களை, 'பூத் கமிட்டி' நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது.
முப்பெரும் விழா மேடையில், உதயநிதி முதல் வரிசையில் அமர்த்தப்பட்டார். அதற்கு நன்றி தெரிவித்து, மீண்டும் நுங்கை சுரேஷ் போஸ்டர் ஒட்டினார்.
இந்நிலையில், 'தகுதியான பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்' என்ற வாசகம், போஸ்டரில் குறிப்பிட்டிருந்ததால், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., நிர்வாகிகள் மீது மறைமுகமாக புகார் தெரிவிப்பது போல் உள்ளது எனக்கூறி, கட்சி தலைமைக்கு புகார் அனுப்பி வைத்தனர்.
அதன் அடிப்படையில் நுங்கை சுரேஷ், கட்சியிலிருந்து நேற்று, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், 'கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில், நுங்கை சுரேஷ் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்' என, குறிப்பிட்டுள்ளார்.
நுங்கை சுரேஷ் மனைவி பிரேமா, ஆயிரம் விளக்கு 113 வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -