முருகக்கடவுளா விஜய்; உருவகப்படுத்தி பாடியதால் சர்ச்சை!
முருகக்கடவுளா விஜய்; உருவகப்படுத்தி பாடியதால் சர்ச்சை!
UPDATED : பிப் 04, 2026 04:02 PM
ADDED : பிப் 03, 2026 04:48 AM

சென்னை: சென்னையில் நேற்று நடந்த தவெக கட்சி விழாவில், விஜயை முருகக்கடவுளாக உருவகப்படுத்தி பாடல் பாடியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு விஜயும் சேர்ந்து ஆடியது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க., மூன்றாம் ஆண்டு துவக்க விழா, சென்னை அருகே பனையூர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், அக்கட்சி தலைவர் விஜய் பேசியதாவது: கடந்த 1977ல், 'அண்ணாதுரை இருந்த இடத்தில், இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை வந்துவிட்டதே என மக்கள் கண்ணீர் வடித்தனர். அதை துடைக்கத் தான் அ.தி.மு.க., துவங்கப்பட்டது' என, எம்.ஜி.ஆர்., சொன்னார். இப்போது, 'காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., இருந்த இடத்தில், இப்படிப்பட்டவர்கள் அமரும் நிலை வந்துவிட்டதே' என, மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அதை துடைக்கவே த.வெ.க., துவங்கப் பட்டிருகிறது.
இன்று, 'விஜய்க்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது. எம்.ஜி.ஆரின் அரசியல் அனுபவம் தெரியுமா?' என விமர்சிக்கின்றனர். இதே வாய் தான், எம்.ஜி.ஆர்., அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்; விளம்பரத்திலேயே வாழும் அட்டக்கத்தி வீரன்; செய்தியாளர்களை சந்திக்க தெரியாது; டில்லிக்கு அஞ்சுபவர்' என்று அன்று சொன்னது. ஆனால், அவர் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். அன்று, பழுத்த அனுபவசாலிகள் என சொல்பவர்களுக்குக்கூட கோட்டை நாற்காலி பகல் கனவாகியது.
தங்களை எதிர்த்து யார் நின்றாலும், அவர்களை சிறுமைப்படுத்துவதுதான் அவர்களின் வேலை. அரசின் அராஜகங்களை, ஊழலை சுட்டிக்காட்டினால், 50 ஆண்டுகள் பழைய தகர டப்பாவை உருட்ட ஆரம்பித்து விடுவர். ஒருபக்கம், தி.மு.க., தலைமையில் சில கட்சிகளும், மறுபக்கம் பா.ஜ., தலைமையில் சில கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், எத்தனை சக்திகள் வந்தாலும், தீய சக்தியை வீழ்த்த துாய சக்தி நம்மால் மட்டுமே முடியும். 'என் கட்சியினரும், அமைச்சர்களும் செய்யும் அடாவடியை பார்க்கும்போது, எனக்கு துாக்கமே இல்லை' என, முதல்வர் ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன் வருத்தப்பட்டார்.
அவர், என்றாவது அசதியாக துாங்கும்போது எழுப்பி, 'யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?' என கேட்டால், அவரை அறியாமலேயே, 'விசில்' என்று உண்மையை சொல்லி விடுவார். சமீபகாலமாக வெளியாகும் கருத்துக்கணிப்பில், பலர் உண்மையை சொல்கின்றனர். ஆனால், சிலர் நம் மீதான வெறுப்பில், கடுப்பு கணிப்புகளை வெளியிடுகின்றனர். பழைய இன்ஜின், ஓட்டை இன்ஜின் என எத்தனை இன்ஜின்கள் வந்தாலும், த.வெ.க., தான், டாப் இன்ஜின். தேர்தலில், மக்கள் ஊதும் விசில் சத்தத்தால், தீய சக்திகளும் ஊழல் சக்திகளும் தெறித்து ஓடும். இவ்வாறு விஜய் பேசினார்.

