4 மாவட்ட வெள்ள பாதிப்புக்கு காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்
4 மாவட்ட வெள்ள பாதிப்புக்கு காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்
ADDED : டிச 06, 2024 06:22 AM

சென்னை: சாத்தனுார் அணையில், பேரிடர் மேலாண்மை விதிமுறைகளை செயல்படுத்தாதது தான், நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சாத்தனுார் அணை, 7.32 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது.
பெரும் சேதம்
'பெஞ்சல்' புயல் காரணமாக, இந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், திடீரென அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அணை திறப்பு பற்றி பொய்யான தகவல்களை பரப்பி, சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வதாக, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், 'அணை திறப்பு குறித்து, ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கையை விடுக்கப்பட்டு, டிச., 2ம் தேதி வினாடிக்கு 1.80 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
'அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால், பொருள் சேதங்களையும், உயிர் சேதங்களையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அப்படியான ஆபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவு நீர் திறக்கப்பட்டது' என்றும் துரைமுருகன் கூறியுள்ளார்.
ஆனால், தேசிய பேரிடர் மேலாண்மை விதிகளை, சாத்தனுார் அணையின் நீர்வளத் துறையினர் கடைபிடிக்காதது தான் வெள்ள சேதத்திற்கு காரணம் என, கூறப்படுகிறது.
நீரியல் வல்லுநர் ஒருவர் கூறியதாவது: சாத்தனுார் அணையில், நவ., 30ம் தேதி நிலவரப்படி, அதன் முழு கொள்ளளவான 7.32 டி.எம்.சி.,யில், 6.99 டி.எம்.சி., நீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 430 கன அடி நீர்வரத்து கிடைத்த நிலையில், வினாடிக்கு 550 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டது.
அணைகளின் நிலவரம்
இதைத் தொடர்ந்து, டிச., 1ம் தேதி அணையின் நீர் இருப்பு 7.08 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2,050 கன அடி நீர்வரத்து கிடைத்த நிலையில், 1,020 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், 2ம் தேதி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 39,540 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து வினாடிக்கு 38,795 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 3ம் தேதி அணைக்கு 58,940 கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. அந்த நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு உள்ளது. நாள்தோறும், 15 முக்கிய அணைகளின் நீர் இருப்பு நிலவரம் தொடர்பாக நீர்வளத்துறை தயாரிக்கும் அறிக்கையில், இந்த தகவல் உள்ளது.
இந்த அறிக்கை, முதல்வர் அலுவலகம், நீர்வளத் துறை அமைச்சர், தலைமை செயலர், வருவாய்த் துறை செயலர் உள்ளிட்ட 14 முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அணையில் இருந்து 1.80 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதாக, அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். நீர்வளத்துறை அறிக்கைக்கும், அமைச்சர் அறிவிப்புக்கும் முரண்பாடு உள்ளது.
பருவ மழைக் காலங்களில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை விதிப்படி, அணைகளின் முழு கொள்ளளவில் 1 டி.எம்.சி.,யை சேமிக்கும் அளவிற்கு காலியாக வைத்திருக்க வேண்டும். ஆனால், சாத்தனுார் அணை முழு கொள்ளளவான 7 டி.எம்.சி., நிரம்பும் வரை காத்திருந்து, அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை
அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, மத்திய நீர்வளத்துறை வாயிலாக, நவ., 29ம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஐந்து முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டதாகக் கூறப்பட்டாலும், நீர் மேலாண்மையில் முறையான கவனத்தை நீர்வளத்துறை செலுத்தவில்லை என்பது, இதன் வாயிலாக உறுதியாகியுள்ளது. சாத்தனுார் அணையால், நான்கு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு இதுதான் காரணம்.
இதை அமைச்சரும், அதிகாரிகளும் மறைக்க முயற்சிக்கின்றனர். அரசு முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வரும்காலங்களில் இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.