குடும்ப தலைவியருக்கு மாதம் ரூ.2,500; அனைத்து பஸ்களிலும் இலவச பயணம்: மகளிர் தின விழாவில் விஜய் வாக்குறுதி
குடும்ப தலைவியருக்கு மாதம் ரூ.2,500; அனைத்து பஸ்களிலும் இலவச பயணம்: மகளிர் தின விழாவில் விஜய் வாக்குறுதி
UPDATED : மார் 08, 2026 02:43 PM
ADDED : மார் 08, 2026 04:36 AM

சென்னை: “அனைத்து குடும்ப தலைவியருக்கும் மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும்; அனைத்து பஸ்களிலும் மகளிருக்கு கட்டணமின்றி பயணம்; தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும்,” என, மகளிர் தின விழாவில், தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் த.வெ.க., தலைவர் விஜய்.
த.வெ.க., சார்பில், மகளிர் தின விழா, மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில், பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த பெண்களுக்கு கைக்கடிகாரம் பரிசாக வழங்கி, விஜய் வாழ்த்தினார்.
பின், அவர் மகளிர் தின வாழ்த்துக்களைக் கூறி, த.வெ.க.,வின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசியதாவது:
* பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் நலன் மற்றும் பாதுகாப்புக்காக தனி இலாகா உருவாக்கப்படும். அது, என் நேரடி கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் இருக்கும்
* நாட்டிலேயே 'நம்பர் 1' மாநிலம் என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க., அரசில், மகளிர் உரிமைத்தொகை எனும் பெயரில், வெறும் 1,000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. நாம் அமைக்கும் மக்கள் அரசில், இனி, 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவியருக்கும், மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும். இதில், மத்திய - மாநில அரசு ஊழியர்கள் குடும்பங்கள் மட்டும் விதிவிலக்கு
* பெண்களுக்கு சமையல் காஸ் சிலிண்டர் விலை பெரிய சுமையாக உள்ளது. அதனால், 'அன்னப்பூரணி சூப்பர் 6' திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்
* 'அண்ணன் சீர்' திட்டத்தின் கீழ், தங்கையரின் திருமணத்திற்கு, ஒரு சவரன் தங்கமும், தரமான பட்டுச்சேலையும், தாய் வீட்டில் இருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும்
* காமராஜர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, எந்த குழந்தையும், கல்வி இடைநிற்றல் இருக்க கூடாது என்பதற்காக, ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலர்களுக்கும் ஆண்டுதோறும் 15,000 ரூபாய் பொருளாதார உதவித் தொகை வழங்கப்படும்
* வெற்றி பயணம் திட்டத்தின் கீழ், அனைத்து பஸ்களிலும் பெண்கள் பயணிக்கும் வகையில் உத்தரவிடப்படும். எந்த ஊரில் இருந்தும் எந்த பகுதிக்கும், அனைத்து பெண்களும் கட்டணமின்றி பயணிக்கலாம்
* நிலுவையில் உள்ள கடன்களை திருப்பி செலுத்துவது வாயிலாகவும் பெண்கள் நடத்தும் சுயஉதவி குழுக்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்குவது வாயிலாகவும் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும்.
சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோராக மாறுபவர்களுக்கு, ஆண்டுதோறும் 5 லட்சம் ரூபாய், 100 சதவீதம் மானியமாக வழங்கப்படும்
* தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளை வரவேற்கும் வகையில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு குழந்தைக்கும், அரசின் ஆசியாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். அதனுடன், ஒரு 'பேபி வெல்கம் கிட்' வழங்கப்படும்.
இப்படி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிப் பேசினார்.

