முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமாரை மாற்ற காரணம் என்ன?: தே.ஜ., கூட்டணி அரசின் அரசியல் வழிகாட்டியாகிறார்
முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமாரை மாற்ற காரணம் என்ன?: தே.ஜ., கூட்டணி அரசின் அரசியல் வழிகாட்டியாகிறார்
ADDED : மார் 08, 2026 04:44 AM

- நமது டில்லி நிருபர் -:
'ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி., ஆன பின்னரே, பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்வார். அதுவரை அவரே முதல்வர் பதவியில் தொடர்வார். தேசிய அரசியலில் தடம் பதித்தாலும், பீஹார் அரசியலை விட்டு அவர் போக மாட்டார். தே.ஜ., கூட்டணி அரசுக்கு மூத்த வழிகாட்டியாக செயல்படுவார். முதல்வர் பதவியை விட்டு விலகுவதற்கு அவரது உடல்நிலையே முழுக்க முழுக்க காரணம்' என, தகவல் வெளியாகி உள்ளது.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் காலியாகும் ஐந்து ராஜ்யசபா இடங்கள் உட்பட, நாடு முழுதும் காலியாகும், 37 ராஜ்யசபா இடங்களுக்கு வரும், 16ல் தேர்தல் நடக்கிறது.
பீஹார் அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலையே புரட்டிப் போடும் வகையில், முதல்வர் நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, 10வது முறையாக முதல்வராக பதவியேற்ற நிதிஷ் குமார், ஐந்து மாதங்கள் கூட ஆகாத நிலையில், இந்த முடிவு எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
உடல்நிலை
இந்த விவகாரம் தொடர்பாக, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
முதல்வர் நிதிஷ் குமாருக்கு பதில், யார் முதல்வராகப் போகிறார் என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. காரணம், இப்போதைக்கு முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்ய மாட்டார். ராஜ்யசபா எம்.பி.,யான பின்னரே, அவர் ராஜினாமா செய்வார்.
அதன்படி, ஏப்., 10க்கு பிறகே, பீஹார் முதல்வர் பதவி காலியாகும். அதனால், யார் அடுத்த முதல்வர் என்ற பேச்சுக்கு இப்போது இடமில்லை.
ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்றதும், எம்.பி.,க்கான பதவியேற்பு உறுதிமொழியை, ஏப்., 10க்குப் பின் தான், டில்லிக்கு வந்து நிதிஷ் குமார் ஏற்க உள்ளார். அதாவது, பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்., 2ல் முடிவடைகிறது.
அதன்பின் தான், பீஹாரில் தலைமை மாற்றத்திற்கான நடவடிக்கைகள் துவங்கும். அதுவரை, பீஹார் முதல்வர் பதவியில் நிதிஷ் குமாரே தொடர்வார்.
ராஜ்யசபா எம்.பி.,யாகி பார்லி.,க்கு சென்றாலும் கூட, கூட்டத்தொடர் நடக்கும் சமயங்களில் மட்டுமே, டில்லியில் அவர் இருப்பார். மற்றபடி, பீஹார் அரசியல் களத்தை விட்டு அவர் போகப் போவதில்லை.
பாட்னாவில் இருந்தபடியே, தன் அரசியல் நடவடிக்கைகளை தீவிரமாக கவனிக்கும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. மேலும், மத்திய அமைச்சரவையில் நிதிஷ் குமாரை சேர்ப்பது குறித்து, இதுவரை எந்தவித ஆலோசனைகளும் நடக்கவில்லை.
அவரை முதல்வர் பதவியில் இருந்து விலக்கும் எண்ணம், பா.ஜ.,வுக்கு துளியும் இல்லை. அவரது உடல்நலம் தான் இதற்கு காரணம். சில ஆண்டுகளாவே, அவரது உடல்நிலை நடவடிக்கைகள் எல்லாம், சற்று வழக்கத்துக்கு மாறாக இருப்பது, அவருக்கு நெருக்கமானவர்களுக்கு நன்கு தெரியும்.
இதை அறிந்தும் கூட, அவர் தலைமையிலேயே பீஹார் சட்டசபை தேர்தலை, தே.ஜ., கூட்டணி சந்தித்தது; மாபெரும் வெற்றியும் பெற்றது.
இது, அவரது நல்லாட்சிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு என்பதை மனப்பூர்வமாக ஏற்று, அவரையே பா.ஜ., முதல்வராக்கியது.
ஆனால், சில மாதங்களாகவே, அவரது உடல்நிலை சீராக இல்லை. அரசு நடவடிக்கைகளில் வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சிக்கல்கள் ஏற்பட்டன.
இதனால் தான், முதல்வர் பதவியிலிருந்து அவரை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது.
அப்போதும் கூட, முதல்வர் பதவி மாற்றம் என்பது மிகுந்த கவுரவத்துடன் இருக்க வேண்டுமென்பதற்காகவே, அவரை ராஜ்யசபா எம்.பி.,யாக்குவது என தீர்மானிக்கப்பட்டது.
உறுதி
பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் மூத்த தலைவர்கள், நிதிஷ் குமாரின் குடும்பத்தினர் சேர்ந்து, தீவிரமாக ஆலோசித்த பின்னரே எடுத்த முடிவு இது. இது குறித்து யாருக்கும் தெரியாது.
அதனால் தான், ஐக்கிய ஜனதா தள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் குழப்பத்திலும், விரக்தியிலும் இருக்கின்றனர். அவர்களை சமாதானப்படுத்த, விரைவில் அவர்களிடம் நிதிஷ் குமார் பேச உள்ளார். அப்போது, 'ராஜ்யசபா எம்.பி.,யானாலும், பீஹார் அரசியலில் முக்கிய பங்கு வகிப்பேன்.
'வரும் 2030 சட்டசபை தேர்தல் வரை, பீஹார் அரசியலில், தே.ஜ., கூட்டணிக்கு தலைவராக மட்டுமல்லாது, அந்த கூட்டணியின் அரசியல் வழிகாட்டியாகவும் செயல்படுவேன்' என, தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு நிதிஷ் குமார் உறுதி அளிக்க உள்ளார்.
இதன் மூலம், கட்சியில் நிலவும் குழப்பம் முடிவுக்கு வரும்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித் தன.

