'மறுமணமில்லை' சான்று ஆண்டுதோறும் கேட்பதால் பெண் ஊழியர்கள் அவதி
'மறுமணமில்லை' சான்று ஆண்டுதோறும் கேட்பதால் பெண் ஊழியர்கள் அவதி
UPDATED : பிப் 13, 2025 04:47 AM
ADDED : பிப் 13, 2025 12:40 AM

குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களில், 60 வயதுக்கு உட்பட்ட பெண்கள், மறுமணம் செய்யவில்லை என்ற சான்றிதழை, ஆண்டுதோறும் வி.ஏ.ஓ.,விடம் பெற்று, ஆயுள் சான்றிதழ் புதுப்பித்தலின் போது வழங்க வேண்டும் என, அரசு போக்குவரத்து கழகம் வற்புறுத்துவது அவதியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த ஓய்வூதியரின் மனைவியான வாரிசுதாரர், 60 வயதிற்கு உட்பட்டவராக இருந்தால், மறுமணம் செய்யவில்லை என, வி.ஏ.ஓ.,விடம் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
அதேநேரத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனைவியான வாரிசுதாரர் பெறும் குடும்ப ஓய்வூதியத்தில், ஆயுள் சான்றிதழ் புதுப்பிக்கும் போது, வி.ஏ.ஓ., சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை.
ஆன்லைனில் சுயசான்றிதழ் பதிவிட்டால் போதும். அரசு போக்குவரத்துத் துறையில் மட்டும் ஆண்டுதோறும் மறுமணம் செய்யவில்லை என்ற, வி.ஏ.ஓ., சான்றிதழ் சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால், பல பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மற்ற அரசு துறை ஓய்வூதிய வாரிசுகளுக்கு வழங்கப்படுவதை போல, அரசு போக்குவரத்துத் துறையிலும், சுயசான்று வழங்கும் நடைமுறையை கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
-- நமது நிருபர் -

