தமிழக பல்கலைகளின் நிதி, நிர்வாக பிரச்னை; முதல்வர் நடத்திய துணைவேந்தர்கள் கூட்டத்திலும் 'கப்சிப்'
தமிழக பல்கலைகளின் நிதி, நிர்வாக பிரச்னை; முதல்வர் நடத்திய துணைவேந்தர்கள் கூட்டத்திலும் 'கப்சிப்'
ADDED : ஏப் 18, 2025 05:26 AM

'தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டத்தில் கல்விசார்ந்த ஆலோசனைகள் மட்டும் வழங்கப்பட்ட நிலையில், பல்கலைகளின் நிதி, நிர்வாகம் சார்ந்த முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவில்லை' என பேராசிரியர்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, பல்கலைகளின் வேந்தர் அதிகாரம் தற்போது முதல்வர் வசம் வந்து விட்டது என தி.மு.க.,வினர் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஏமாற்றம்
இந்நிலையில், அனைத்து பல்கலை துணைவேந்தர்கள், பதிவாளர்களுக்கான கூட்டத்தை முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடத்தினார். பல்கலைகளில் நிதி, நிர்வாகம் சார்ந்த பிரச்னைகள் அதிகரித்துள்ள நிலையில் இதற்கெல்லாம் முதல்வர் நடத்திய கூட்டத்தில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பங்கேற்ற துணைவேந்தர்கள், பதிவாளர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
அந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், 'கல்வி நிலையங்களில் அறிவியல்பூர்வமான கருத்துக்களை மட்டுமே போதிக்க வேண்டும். பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக்கதைகளையோ தவறியும் மாணவர்களிடையே பரப்பி விடக்கூடாது' என்பது போன்ற ஆலோசனைகளை வழங்கினார். ஆனால், தற்போதைய முக்கிய தேவையான பல்கலைகளின் நிர்வாக ரீதியான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்படவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, 21 அரசு பல்கலைகளில் காமராஜ், திருவள்ளுவர், பாரதிதாசன், அண்ணா உட்பட எட்டு பல்கலைகளில், துணைவேந்தர் பணியிடம் பல மாதங்களாக காலியாக உள்ளன. பெரியார் பல்கலையில் துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்தும் பதவி நீட்டிப்பில் தொடர்கிறது.
இதுபோல் பெரும்பாலான பல்கலைகளில் நோடல் பதவிகளான பதிவாளர், தேர்வாணையர், டீன், இயக்குநர் உள்ளிட்ட பதவிகளும் காலியாக உள்ளன. மதுரை காமராஜ் பல்கலையில் இப்பதவிகள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. இதுதவிர, 10 ஆண்டுகளுக்கும் ஆசிரியர், அலுவலர்கள் உள்ளிட்ட நிரந்தர பணியிடங்கள் பல்கலைகளில் நிரப்பப்படவில்லை. 80 சதவீதம் வரை தொகுப்பூதியத்தில் தான் பணிபுரிகின்றனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பின்னடைவு பணியிடங்களும் காலியாக உள்ளன. ஆசிரியர்கள், அலுவலர்களுக்கான பதவி உயர்வு கிடப்பில் போடப்பட்டுஉள்ளன.
நிதிச்சுமை
குறிப்பாக மதுரை காமராஜ் பல்கலை தொடர்ந்து நிதிச்சுமையில் பாதிக்கப்பட்டு, சம்பளம் வழங்குவது சவாலாகி வருகிறது. இப்பல்கலைக்கு 150 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 60 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்கலைகள் நிதிசார் பிரச்னைகளில் தள்ளாடுகின்றன.
ஓய்வூதியப் பலன்களை கூட வழங்க முடியாத நிலைக்கு பல்கலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவைபோன்ற பிரச்னைகள் விவாதிக்கப்பட்டிருந்தால், உயர்கல்வி நிலை எந்த நிலையில் உள்ளது என முதல்வருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இது ஏமாற்றத்தை தந்துள்ளது. இவ்வாறு பேராசிரியர்கள் கூறினர்.
- நமது நிருபர் -