உரிமைத்தொகை திட்டத்தால் நிதி நெருக்கடி: விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்க தாமதம்
உரிமைத்தொகை திட்டத்தால் நிதி நெருக்கடி: விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்க தாமதம்
ADDED : டிச 22, 2025 01:10 AM

சென்னை: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், 'டிட்வா' புயல் காரணமாக பெய்த கன மழையால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார், திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில், 1 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
புயல் மற்றும் வெள்ளப் பாதிப்பு குறித்து, தலைமை செயலகத்தில் கடந்த 1ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பல்வேறு கலெக்டர்களிடம், பாதிப்பு விபரங்களை முதல்வர் கேட்டறிந்தார்; பின், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
8,000 ரூபாய்
இதை தொடர்ந்து, நெல் பயிருக்கு ஏக்கருக்கு 8,000 ரூபாய் வழங்கப்படும் என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அறிவித்தார். மாநிலம் முழுதும், பயிர் பாதிப்பு தொடர்பான கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு, கலெக்டர் வாயிலாக வேளாண் துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அங்கிருந்து மாநில பேரிடர் ஆணையத்திடம், விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் பயிர் இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கவில்லை. மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டத்தில், கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து, நிதித்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெருமளவு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியமாக வழங்கப் படுகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டம், 2023 செப்டம்பர் முதல் செயல்படுத்தப்படுகிறது.
மாதந்தோறும், 15ம் தேதி மகளிர் உரிமைத்தொகை விடுவிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, 1.30 கோடி மகளிருக்கு, தலா 1,000 ரூபாய் விடுவிக்கப்பட்டு உள்ளது. அதனால், அரசிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் விடுவிப்பதில் சிக்கல் ஏற்படும்.
தீவிர முயற்சி
எனவே, நிலைமையை சமாளித்து, விவசாயிகளுக்கு பயிர் இழப்பீடு வழங்க, நிதித் துறையினர் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். பயிர் இழப்பீட்டை விரைந்து வழங்காவிட்டால், விவசாயிகள் போராட்டத்தை கையில் எடுப்பர். அதற்கு முன் இழப்பீட்டை வழங்கும்படி, வேளாண் துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அழுத்தம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

