எங்களுக்கு உதவுவதில் இந்தியாவுக்கு இணை இல்லை: இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பெருமிதம்
எங்களுக்கு உதவுவதில் இந்தியாவுக்கு இணை இல்லை: இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பெருமிதம்
ADDED : டிச 22, 2025 01:34 AM

சென்னை: “இலங்கை மீனவர்களை இந்தியா கைது செய்வதும், இந்திய மீனவர்களை இலங்கை கைது செய்வதும் தொடர்ந்து நடக்கும் விஷயமாக உள்ளது.
''இந்த பிரச்னையை, இரு பிரிவினரும் ஒரு வீட்டிற்குள் நடக்கும் பிரச்னையைாக பேசி தீர்த்துக் கொள்ளலாம்; அரசியல் பிரச்னையாகவோ, வேறு பிரச்னையாகவோ கொண்டு செல்லாமல், அண்ணன் - தம்பி போன்று பேசி தீர்த்துக் கொள்வது தான் சிறப்பாக இருக்கும்,” என, இலங்கை நாட்டின் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் துறை துணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
நம் நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:
இலங்கையில் ஒரு புதிய ஆட்சி அமைந்த பின், பொருளாதாரத்தில் எழுச்சி கொண்ட நாடாக நாங்கள் வளர்ந்து வருகிறோம். இந்நிலையில், 'டிட்வா' புயல் காரணமாக, இலங்கைக்கு பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம், மண் சரிவு அபாயத்தில் தவித்த வேளையில், எங்களுக்கு நேசக்கரம், உதவிக்கரம் தந்த இந்திய அரசு, தமிழக அரசு, இந்திய மக்களுக்கு மனமார்ந்த நன்றி.
அரசியல் மாற்றம்
ஏனெனில், இலங்கைக்கு எந்த நேரத்திலும் தோழனாக, அண்ணன் - தம்பியாக உதவி புரிவதில், இந்தியாவுக்கு இணை கிடையாது. இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு வரலாற்று காலம் முதல் காணப்படுகிறது. ஆபத்தில் உதவுபவர் நண்பர் என்பர். அதேபோல் தான் இந்தியாவை நாங்கள் பார்க்கிறோம்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு, இந்தியா பெரிதும் உதவுகிறது. இலங்கைக்கு அன்னிய செலாவணியை கொண்டு வரும் துறையாக, சுற்றுலா மாறி இருக்கிறது. இந்தியாவில் இருந்து தான் அதிக சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
சுற்றுலா துறையை மேலும் வளர்ச்சியடைய செய்ய, இந்தியாவில் இருந்து இன்னும் அதிக பேர் வருவதற்கான திட்டங்களை தயாரித்து வருகிறோம். கல்வி, உயர் கல்வி வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தொழில் கல்வி, மருத்துவம், மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்தவும் ஆலோசித்து வருகிறோம்.
இந்தியாவில் விவசாய துறை வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த உதவிகளை, எங்கள் நாட்டிற்கு கொண்டு சேர்த்து, இலங்கையில் வளர்ச்சியை ஏற்படுத்த விரும்புகிறோம். இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ பொருட்கள், உணவு பொருட்கள், இந்தியாவில் இருந்து தான் அதிகம் வருகின்றன. இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்ய கூடிய வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள், இந்தியாவுக்கு தான் அதிகம் செல்கின்றன.
இலங்கையின் பொருளாதார, வியாபார விருத்திக்கு, இந்தியா பெரிய உதவிகளை செய்கிறது. வியாபார துறை வாயிலாக பொருளாதார வளர்ச்சி அடைய விரும்புகிறோம். இலங்கையில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லா வளங்களையும் உடைய நாடு இலங்கை. எனவே, முதலீட்டாளர்கள் இலங்கை நோக்கி படையெடுக்கின்றனர். தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்கள், இலங்கைக்கு வந்து முதலீடு செய்ய வேண்டும். எங்களின் பொருளாதாரத்தை முன்னேற்றம் செய்ய நேசக்கரம் நீட்டுகிறோம்.
கலாசார உதவி
தமிழக முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்தோம். அவர், புயல் தாக்கத்தின் போது, உடனே எங்களுக்கு உதவிகளை வழங்கியிருந்தார். சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் வாயிலாக, அனைத்து உதவிகளையும் வழங்கினார்.
சென்னையில் இலங்கை துாதரகம் சிறப்பாக செயல்படுகிறது. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தோம். அவர், தங்களின் உதவி இலங்கைக்கு தொடர்ந்து கிடைக்கும் என்றார்.
மலையகத்தில் உள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு, தமிழக முதல்வர் உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இலங்கையில் உள்ள மக்களுக்கு உயர் கல்வி வாய்ப்பை பெற்று தருவதாக கூறியிருக்கிறார். சமய, கலாசார உதவிகளை வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.
இலங்கை மீனவர்களை இந்தியா கைது செய்வதும், இந்திய மீனவர்களை இலங்கை கைது செய்வதும் தொடர்ந்து நடக்கும் விஷயமாக உள்ளது. கடல் வளம் என்பது மிக முக்கியமானது. இன்று மட்டுமல்ல, அடுத்த சந்ததியினருக்கும் கடல் வளத்தை விட்டுச்செல்ல வேண்டும். இன்று தடை செய்யப்பட்ட உபகரணங்களை கொண்டு மீன் பிடிப்பதால், கடல் வளம் முற்றாக அழிகிறது. கடல் வளம் பாலைவனமாக மாறி வருகிறது.
எனவே, தடை செய்யப்பட்ட உபகரணங்களை கொண்டு மீன் பிடிப்பதை, மீனவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தமிழர்கள். இந்தியாவில் இருந்து மீன்பிடிக்க வருபவர்களும் தமிழர்கள். இலங்கையில் இருந்து மீன்பிடிக்க செல்பவர்களும் தமிழர்கள். இந்த பிரச்னையை, இரு பிரிவினரும் ஓரிடத்தில் அமர்ந்து, ஒரு வீட்டிற்குள் நடக்கும் பிரச்னையைாக பார்த்து பேசி தீர்த்து கொள்ளலாம்.
அரசியல் பிரச்னையாகவோ, வேறு பிரச்னையாகவோ கொண்டு செல்லாமல், அண்ணன் - தம்பி போன்று பேசி தீர்த்துக் கொள்வது தான் சிறப்பாக இருக்கும். இரு நாட்டு மீனவர்களும் தமிழர்கள்; ஒரே மொழியை பேசுபவர்கள்; ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, வாருங்கள், பேசுங்கள்; பிரச்னையை தீர்த்து கொள்ளுங்கள்.
தமிழக அரசின் சுற்றுலா மற்றும் ஹிந்து சமய அறநிலைத் துறை செயலர் மணிவாசனை சந்தித்து பேசினோம். இரு நாட்டு சுற்றுலா தொடர்பாக கலந்துரையாடினோம். அது மட்டுமல்லாது, இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்களை, இலங்கை சுற்றுலா பயணியர் பார்வையிடவும், இலங்கையில் உள்ள வழிபாட்டு தலங்களை இந்தியர்கள் பார்வடையிடவும், சிறப்பான திட்டத்தை வகுப்பதற்காக கலந்துரையாடினோம். இவ்வாறு அவர் கூறினார்.

