ADDED : மார் 15, 2024 02:26 AM

தமிழகத்தில் நீலகிரி, கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல், வனத்துறையினர் திணறுவதாக கூறப்படுகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னுாரை அடுத்த, பந்துமி, 'பாரஸ்ட் டேல்' பகுதியில், மூன்று நாட்களாக பற்றி எரிந்த வனத்தீயால், 10 ஏக்கரில் மரங்கள், செடிகள், அரிய வகை மூலிகைகள் அழிந்தன.
வனப்பகுதிக்குள் வாகனங்களில் தண்ணீர் கொண்டு செல்லும் முடியாத சூழ்நிலையில், தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், தன்னார்வலர்கள் என, 70க்கும் மேற்பட்டோர் தீத்தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். எனினும், கட்டுக்கடங்காமல் தீ பரவி வருவதால், வனத்துறையினர் திணறுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் நடத்திய விசாரணையில், 'பாரஸ்ட் டேல் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சிலர் சருகுகளை எரித்த போது தீ வனத்தில் பரவியது' என்பது தெரிந்தது.
இதுதொடர்பாக, தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீல பாண்டியன், 64, சோலடா மட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் கருப்பையா, 63, மோகன், 35, ஜெயகுமார், 60, ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், மாவட்ட கலெக்டர் அருணா, ஹெலிகாப்டரை பயன்படுத்தி தீயை அணைக்க, கோவை சூலுார் விமான நிலைய அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதேபோல, கொடைக்கானலிலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகி இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
-நமது நிருபர்-

