'வெளிநாட்டு முதலீடா, வெளிநாட்டில் முதலீடா?' ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி மேல் கேள்வி
'வெளிநாட்டு முதலீடா, வெளிநாட்டில் முதலீடா?' ஸ்டாலினுக்கு விஜய் கேள்வி மேல் கேள்வி
UPDATED : செப் 21, 2025 07:14 AM
ADDED : செப் 21, 2025 05:58 AM

''வெளி நாட்டு முதலீடா; வெளிநாட்டில் முதலீடா?'' என முதல்வர் ஸ்டாலினை, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்தார்.
நாகப்பட்டி னத்தில் நேற்று நடந்த, த.வெ.க., பிரசார கூட்டத்தில், அவர் பேசியதாவது: 'தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு எங்கள் ஆட்சி தான் சாட்சி' என்று அடுக்கு மொழியில் பேசுவதை கேட்டு, நம் காதில் ரத்தம் வடிந்தது தான் மிச்சம். இவர்கள் ஆண்டது போதாதா; மக்கள் தவியாய் தவிப்பது போதாதா?
கடந்த 2011 பிப்ரவரி 22ம் தேதி, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டதை கண்டித்து, இதே நாகையில் பொதுக்கூட்டம் நடத்தினேன். நான் களத்துக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. முன்பு, விஜய் மக்கள் இயக்கமாக வந்தோம்; இப்போது, த.வெ.க., என்ற அரசியல் கட்சியாக வந்துள்ளோம்.
மீனவர்களின் உயிர் எந்த அளவு க்கு முக்கியமோ, அந்த அளவுக்கு ஈழத் தமிழர்களின் கனவும், வாழ்க்கையும் முக்கியம். மீனவர்கள் படும் கஷ்டங்களை பார்த்து விட்டு, கடிதம் எழுதி விட்டு அமைதியாக கடந்து போக, நாங்கள் கபட நாடக தி.மு.க., அரசும் அல்ல. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர் கள் என்று பிரித்து பேச, பாசிச பா.ஜ.,வும் அல்ல. மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது தான் எங்கள் திட்டம்.
நாகை மாவட்டத்திற்கு காவிரி நீரை கொண்டு வந்திருக்கலாம். அரசு கடல்சார் பல்கலை, கடல் உணவு சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வந்திருக்கலாம்; ஆனால், செய்யவில்லை. ஒவ்வொரு முறையும் வெளிநாட்டு பயணம் முடித்து வரும்போதும், 'அத்தனை கோடி முதலீடு, இத்தனை கோடி முதலீடு' என, முதல்வர் ஸ்டாலின் சிரித்துக் கொண்டே சொல்வார். சி.எம்., சார்... மனதை தொட்டு சொல்லுங்கள்.
வெளிநாட்டு முதலீடா; இல்லை வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் முதலீடா; குடும்ப முதலீடு வெளிநாட்டிற்கு செல்கிறதா? தேர்தலுக்கு முன் தி.மு.க.,வினர், 'செய்வோம் செய்வோம்' என்று சொன்னரே, செய்தனரா? ஆனால், எல்லாத்தையும் செய்தது போலவே பெருமையாகச் சொல்வர். மக்களின் வேலைகள் பாதிக்கக்கூடாது. மக்களுக்கு தொந்தரவு கூடாது என்பதற்காகவே சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என, ஓய்வு நாட்களாகப் பார்த்து பிரசாரம் செய்து வருகிறேன்.
அது மட்டுமல்ல, அரசியலில் சிலருக்கு ஓய்வும் கொடுக்க வேண்டியுள்ளது. 'அங்கு பேசக்கூடாது; இங்கு பேசக்கூடாது; ஐந்து நிமிடம், 10 நிமிடம் தான் பேச வேண்டும்' என கட்டுப்பாடு விதிக்கின்றனர். கேட்கும் இடங்களில் அனுமதி மறுக்கின்றனர். நான் பேசுவதே மூன்று நிமிடங்கள்தான். அரியலுார் மக்களிடம் பேசச் சென்றபோது, மின்சாரத்தை நிறுத்தி விட்டனர். திருச்சியில் பேச ஆரம்பித்ததும், 'ஸ்பீக்கர்' ஒயரை 'கட்' செய்து விட்டனர்.
ஆர்.எஸ்.எஸ்., தலைவரோ, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சரோ இங்கு வந்தால், இதுபோல கட்டுப்பாடு விதிப்பீர்களா; முடியாது. நீங்கள்தான் அவர்களுடன் மறைமுக உறவு வைத்துள்ளவர்கள் ஆயிற்றே. மக்களை பார்த்து சிரிக்காதே, கை அசைக்காதே என்கின்றனர். நேர டியாக கேட்கிறேன். முதல்வரே மிரட்டிப் பார்க்கறீங்களா... அதுக்கு விஜய் ஆளில்லை; என்ன செய்து விடுவீர்கள்?
கொள் கையை பெயருக்கு வைத்துக் கொண்டு, குடும்பத்தை வைத்துக் கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால். சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்? சாதாரண தமிழகத்தைச் சேர்ந்த ஒருவராக, என் மக்களை, என் சொந்தங்களை பார்க்கத் தடையா? இந்த அடக்குமுறை, அராஜக அரசியல் வேண்டாம் சார். நான் தனி ஆள் இல்லை சார். நான் மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி. மாபெரும் பெண்கள் சக்தியின் சகோதரன், மாபெரும் இளைஞர் இயக்கமாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
நீங்களா, நானா? பார்த்து விடலாம்!
மறுபடியும் சொல்கிறேன். வரும் 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., - த.வெ.க., இடை யேதான் போட்டி. இந்த பூச்சாண்டி காட்டுவதை எல்லாம் விட்டுவிட்டு, தில்லா, கெத்தா, நேர்மையா தேர்தலை சந்திக்க வாருங்கள்; பார்த்துக் கொள்ளலாம். கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு, குடும்பத்தை வைத்து தமிழகத்தை கொள்ளையடிக்கும் நீங்களா? இல்லை, தமிழகத்தின் ஒவ்வொரு வீடுகளிலும் ஒருவராக இருக்கும் நானா என்று பார்த்து விடலாம். இனிமேல் தடை போட்டால், நான் மக்களிடமே அனுமதி கேட்டுக் கொள்வேன். எனக்கு தடை போடும் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா; மக்கள் நன்மைக்காக த.வெ.க., ஆட்சிக்கு வர வேண்டுமா? இந்த போர் முழக்கம், முதல்வர் ஸ்டா லினை ஒரு நிமிடம் கூட துாங்கவிடாது. - விஜய், தலைவர், த.வெ.க.,
நமது நிருபர்