ஜி.எஸ்.டி., சேமிப்பு திருவிழா இன்று துவக்கம்! அனைவருக்கும் பயனளிக்கும் என பிரதமர் பெருமிதம்
ஜி.எஸ்.டி., சேமிப்பு திருவிழா இன்று துவக்கம்! அனைவருக்கும் பயனளிக்கும் என பிரதமர் பெருமிதம்
UPDATED : செப் 22, 2025 06:58 AM
ADDED : செப் 22, 2025 01:19 AM

நாடு முழுதும் இன்று(செப்.,22) முதல் திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி., அமலாகவுள்ள நிலையில், ''இந்த மாற்றம், புதிய தலைமுறைக்கான சீர்திருத்தம்,'' என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
''நடுத்தர மக்கள், இளைஞர்கள் மற்றும் நுகர்வோரின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த மாற்றம் வழிவகுக்கும்,'' என்றும் அவர் கூறியுள்ளார். நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த சீர்திருத்தம், இன்று முதல் நாடு முழுதும் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு 'டிவி' வாயிலாக உரையாற்றினார். அப்போது, ''ஜி.எஸ்.டி., சேமிப்பு திருவிழா இன்று முதல் துவங்குகிறது. இந்த சீர்திருத்தம், நாடு முழுதும் அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும்,'' என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சேமிப்பு உயரும்
ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:
புதிய ஜி.எஸ்.டி., விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது; இது, வெறும் வரி குறைப்பு நடவடிக்கை அல்ல; ஜி.எஸ்.டி., சேமிப்பு திருவிழா. அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை இதன் மூலம் குறையும்; நுகர்வு அதிகரிக்கும்; பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
இந்த சீர்திருத்தம் வெறும் விலை குறைப்பாக மட்டும் இருக்காது; புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் வழி வகுக்கும்.
நடுத்தர மக்களின் சேமிப்பு உயரும். ஏழைகள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், வர்த்தகர்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும்.
ஒட்டுமொத்த பொருளாதாரமும் உத்வேகம் பெறும். இந்த சீர்திருத்தம் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்திய பொருளாதாரத்தில் புதிய அத்தியாயம் துவங்குகிறது.
மக்களுக்கே முதல் முன்னுரிமை என்ற வகையில் அரசின் பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி., மற்றும் வருமான வரி குறைப்புகள் மூலம், 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மக்களின் கைகளில் பணப் புழக்கம் ஏற்படும்.
இதன் மூலம் மக்களின் நுகர்வு திறன் அதிகரிக்கும். தொழில் துறை முதல், வேளாண் துறை வரை என, ஒவ்வொரு துறைகளிலும் அதன் பலன்கள் எதிரொலிக்கும். இது, ஒவ்வொரு வீட்டிற்கும் பலன் கிடைக்கும் வகையிலான சீர்திருத்தம்.
நாட்டின் எதிர்கால தேவைகள் மற்றும் கனவுகளை மனதில் வைத்து, ஜி.எஸ்.டி.,யில் புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி., விகிதங்கள் குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டது, குடிசை தொழில், சிறு தொழில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகப் பெரிய அளவில் பலன் அளிக்கும்; அவர்களது விற்பனை உயரும்.
குறைந்த அளவிலான தொகையை மட்டுமே இனி அவர்கள் வரியாக செலுத்த வேண்டியிருக்கும். இதன் அர்த்தம் என்னவெனில், அவர்களுக்கும் இரட்டிப்பு பலன் கிடைக்கப் போகிறது என்பது தான்.
நம்மை அறியாமல் ஏராளமான வெளிநாட்டு பொருட்கள், நம் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டன. நாம், இனி வெளிநாட்டு பொருட்களை நம்பி இருக்கக்கூடாது. நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை தர வேண்டும். சுதேசி பொருட்களை மக்கள் அதிகமாக வாங்க வேண்டும். சுதேசி பொருட்கள் விற்பதை, கடை உரிமையாளர்கள் பெருமிதமாக கருத வேண்டும்.
அனைத்து மாநில அரசுகளும் சுயசார்பு இந்தியா மற்றும் சுதேசி இயக்க பிரசாரங்களை ஊக்கப்படுத்த வேண்டும். மத்திய - மாநில அரசுகள் ஒன்றாக கைகோர்த்து பயணிக்கும்போது, தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற கனவு நனவாகும். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி பெறும். இதன் மூலம் நம் நாடு விரைவில் வளர்ந்த நாடாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய விடியல்:
நவராத்திரி விழா இன்று துவங்கும் நேரத்தில், முழு தேசத்திற்கும் புதிய விடியல் பிறந்திருக்கிறது என பா.ஜ., - எம்.பி., பிரவீன் கண்டேல்வால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நவராத்திரி விழா துவங்கும் சமயத்தில், நாட்டிற்கு புதிய விடியல் பிறந்திருக்கிறது. இதன் பெருமை பிரதமர் மோடியையே சேரும். தேசத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக இவ்வளவு பெரிய வரி சீர்திருத்தம் நடந்திருக்கிறது. இதனால், பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும். இதன் பலனை ஒவ்வொரு நுகர்வோருக்கும், நம் நாட்டின் வர்த்தகர்கள் கடத்திச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -