sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'குருவி' முதல் 'ரேவ் பார்ட்டி' வரை... ஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம்

/

'குருவி' முதல் 'ரேவ் பார்ட்டி' வரை... ஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம்

'குருவி' முதல் 'ரேவ் பார்ட்டி' வரை... ஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம்

'குருவி' முதல் 'ரேவ் பார்ட்டி' வரை... ஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம்


ADDED : மார் 03, 2024 02:30 AM

Google News

ADDED : மார் 03, 2024 02:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேற்கு டில்லியில், பஸாய் தாராபூர் என்ற பகுதியில், கடந்த மாதம், 15ம் தேதி மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் டில்லி போலீசார் இணைந்து சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசோக்குமார் ஆகியோரை கைது செய்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப வைத்திருந்த, 50 கிலோ, 'ஸூடோ-எபிட்ரின்' என்ற ரசாயனத்தை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ரசாயனத்தின் சந்தை மதிப்பு, 75 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.

வழக்கமாக இந்த ரசாயனம் ஆஸ்துமா, ஸைனுஸைடிஸ் போன்ற சுவாச பிரச்னைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதேநேரம், 'மெத்தாம்பெட்டமைன்' என்ற போதைப்பொருளுக்கு மூலப்பொருளாகவும் பயன்படுகிறது.

விசாரணையில், இந்த கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டவர், தி.மு.க.,வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் என்றும், அவரது சகோதரரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீனும் இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிய வந்தது.

இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், 3,500 கிலோ போதைப்பொருட்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும், அதன் வாயிலாக, 5,000 கோடி ரூபாய் வரை சம்பாதித்திருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

குருவி வேலை


ஜாபர் சாதிக்குக்கு, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சொந்த ஊராக இருந்தாலும், அவர் தொழில் நிமித்தமாக சென்னையில் உள்ள பெரம்பூருக்கு இடம் பெயர்ந்து, அங்கே வாழ்ந்து வந்தார். முதலில் தன் சகோதரர் சலீமுடன் சேர்ந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

ஒரு கட்டத்தில், தொழில் ரீதியாக சிலருடன் பிரச்னை உருவாகி, கடும் நெருக்கடி ஏற்பட்டது. வழக்குகளை எதிர்கொண்ட அவரும், அவரது சகோதரரும் அவற்றில் இருந்து விடுபட்டு, கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தனர். பின், சென்னை பர்மா பஜார் தொடர்பு ஏற்பட, அங்கிருந்தபடியே வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த, 2010 வரை இப்படி சென்று கொண்டிருந்த ஜாபர் சாதிக், அதே பர்மா பஜார் தொடர்பை பயன்படுத்தி, நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான, ஜக்குபாய் படத்தை, திருட்டு வி.சி.டி.,யில் தயாரித்து புழக்கத்தில் விட்டார். இது தொடர்பான பிரச்னையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது, அவருக்கு பின்புலமாக இருந்து உதவியது, தற்போது திரையுலகில் இருக்கும் பிரபலமான இயக்குனர் ஒருவர் தான். இதையடுத்து, ஜாபர் சாதிக்கும், அவரின் சகோதரரும் வெளிநாடுகளில் இருந்து சட்ட அனுமதி பெறாத பொருட்களை எடுத்து வரும் 'குருவி'யாக செயல்பட துவங்கினர்.

அப்போது அவர்களுக்கு, சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தும் நபர்களோடு தொடர்பு ஏற்பட்டது.

அந்த தொடர்புகளை வைத்து, தமிழகம் வாயிலாக போதைப்பொருட்களை கடத்தி வந்தனர். அந்த வருமானத்தை வைத்து, சினிமாக்காரர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் முக்கியஸ்தர்கள் என, பல தமிழக வி.ஐ.பி.,க்களுடன் நெருக்கமாகி விட்டனர்.

'ரேவ் பார்ட்டி'


பணத்தை தண்ணீராக வாரி இரைத்து பலரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜாபர் சாதிக், ஒரு கட்டத்தில் கோயம்புத்துார் பகுதியில் பிரமாதமாக நடந்து வரும், 'ரேவ் பார்ட்டி' எனப்படும், போதைப்பொருள் பார்டியை சென்னையிலும் அறிமுகம் செய்து வைத்தார்.

கிழக்கு கடற்கரை சாலையில், பண்ணை வீடுகளில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட, 'ரேவ் பார்ட்டி'கள் அடிக்கடி நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசியல், சினிமா, தொழில் அதிபர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் என, பலரும் சென்று வந்துள்ளனர்.

இதன் வாயிலாக, ஆளும் கட்சியில் மிக மிக முக்கியமான புள்ளிகளுடன் தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். பல ஆளும் கட்சி பிரமுகர்கள், போலீஸ் உயரதிகாரிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

தன்னை தேடி மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் வருவது தெரிந்ததும், ஜாபர் தலைமறைவாகி விட்டார். அவர் தலைமறைவாவதற்கு முன், யாருடன் போனில் பேசினார் என்ற தகவலை போலீசார் எடுத்துள்ளனர்.

அதில், சினிமா பிரபலங்களும், போலீஸ் அதிகாரிகளும், ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்களும் தொடர்ச்சியாக, ஜாபரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்துள்ளதை, போலீசார் கண்டறிந்து உள்ளனர்.

ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் இஸ்லாமிய மார்க்க பேச்சாளர் அப்துல் பாஸித் புகாரி ஆகியோர் இணைந்து நடத்தி வரும், 'லா கபே' என்ற நிறுவனத்தை பற்றியும், பல தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பல்வேறு மட்டங்களில், பணத்தை வாரிக்கொடுத்து, தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்ட ஜாபர் சாதிக், மார்க்க போதகர்களிடமும் அணுக்கமாக இருந்தார். அவர்கள் வாயிலாக ஆயுத போராட்ட குழுக்களுக்கும், பண உதவி செய்திருக்கிறார் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ., விசாரிப்பதாக கூறப்படுகிறது.

விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் போது, மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் போதை தலைமையிடம்?

l 2021 செப்., 15: - குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்தில் ஈரானில் இருந்து வந்த இரண்டு சரக்கு கன்டெய்னர்களில், 3,000 கிலோ,' ஹெராயின்' போதைப்பொருளை கைப்பற்றினர். அதன் மதிப்பு, 21,000 கோடி ரூபாய். இந்த வழக்கில், சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது மனைவி துர்கா வைசாலி முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டனர்l 2021 மார்ச் 18:- லட்சத்தீவு அருகே ஒரு படகில் இருந்து, 300 கிலோ ஹெராயின், பாகிஸ்தான் குறியீடு உள்ள ஐந்து ஏ.கே., 57 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயிரம் 9 எம்.எம். தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கையை சேர்ந்த ஐந்து பேர் படகில் இருந்து கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தமிழகத்தில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்களுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. முகாமில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன l 2022 நவ., 29: -ராமநாதபுரம் ஆளும் கட்சி பிரமுகர்களிடம் இருந்து, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'கோகைன்' என்ற போதைப்பொருளை கைப்பற்றினர்l 2024 ஜன., 22: - சென்னை அமைந்தகரை அருகே, நைஜீரியா நாட்டினரிடம் இருந்து ஒரு கிலோ கோகைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. ஆனால், சில முக்கியஸ்தர்களின் தலையீட்டால், அவர்களை முறையாக விசாரணை செய்யாமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது l 2024 பிப்., 27: - குஜராத் கடல் பகுதியில், 3,300 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இந்த சரக்கு தமிழக படகில் ஏற்றப்பட இருந்தது தெரிய வந்துள்ளது l 2024 பிப்., 29 - சென்னையை சேர்ந்த பிளமன் பிரகாஷ் என்பவர், மதுரை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம், 30 கிலோ மெத்தாம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டது. அவருடைய வீட்டில் மேலும் ஆறு கிலோ கிடைத்தது. இவற்றின் மதிப்பு, 200 கோடி ரூபாய் என, காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.



- நமது நிருபர் ---






      Dinamalar
      Follow us