'கஞ்சா' சிறுவர்கள் வெறியாட்டம்; தமிழகம் போதை களமாவதாக அரசியல் கட்சிகள் கண்டனம்
'கஞ்சா' சிறுவர்கள் வெறியாட்டம்; தமிழகம் போதை களமாவதாக அரசியல் கட்சிகள் கண்டனம்
UPDATED : டிச 30, 2025 06:17 AM
ADDED : டிச 30, 2025 05:08 AM

திருத்தணி: கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், 'ரீல்ஸ்' மோகத்தால், வடமாநில வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுப்பட்ட வடமாநில வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார். தமிழகம் போதைக்களமாக மாறிவிட்டதாக, அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில், கஞ்சா அதிகம் விற்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக வேலுார், ராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு, கஞ்சா பெட்டலங்கள் கடத்தப்படுவதும் அதிகம் நடந்து வருகிறது.
கஞ்சா பழக்கத்திற்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாலிபர்கள் அடிமையாகி, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 27ம் தேதி, திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில், வாலிபர் ஒருவர் வெட்டு காயங்களுடன், ஆபத்தான நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருத்தணி போலீசார் விரைந்து சென்று, வாலிபரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சைக்கு பின், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருத்தணி போலீசார் விசாரித்ததில், காயமடைந்த வாலிபர் மஹாராஷ்டிரா மாநிலம், சோலப்பூரை சேர்ந்த சுராஜ், 30, என்பதும், கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதும் தெரிய வந்தது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் வடமாநில வாலிபர் சுராஜை, சிறுவர்கள் அரிவாளால் வெட்டும் காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி, தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
போலீசார் வீடியோ காட்சி பதிவுகளை வைத்து விசாரித்ததில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவைச் சேர்ந்த இருவர், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகாவைச் சேர்ந்த இருவர் என, 17 வயதுள்ள நான்கு சிறுவர்கள் இதில் ஈடுபட்டதும், கஞ்சா போதையில் இருந்ததும் தெரிந்தது.
நான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று சிறுவர்கள், செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஒருவர், பிளஸ் 2 படித்து வருவதால், நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவர்களின் கொடூரமான செயல், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

