மகனை சரியாக வளர்க்கவில்லை: விம்மி அழுத பா.ம.க., ராமதாஸ்
மகனை சரியாக வளர்க்கவில்லை: விம்மி அழுத பா.ம.க., ராமதாஸ்
UPDATED : டிச 30, 2025 07:19 AM
ADDED : டிச 30, 2025 04:55 AM

சேலம்: “அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை. அதனால், ஈட்டியால் குத்துவதுபோல என் மார்பிலும், முதுகிலும் குத்துகிறான்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கதறி அழுதார்.
ராமதாஸ் தரப்பினர் சார்பாக, பா.ம.க., பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. அதில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:
நான் வளர்த்தெடுத்த, நான் பொறுப்பு கொடுத்த பிள்ளைகள், என்னை மிக கேவலமாக துாற்றுகின்றனர். அன்புமணியை நான் சரியாக வளர்க்கவில்லை. அதனால்தான், ஈட்டியால் குத்துவதுபோல மார்பிலும், முதுகிலும் குத்துகிறான். அன்புமணிக்கு, தந்தையாக நான் எந்த குறையும் வைக்கவில்லை.
என்னை துண்டு துண்டாக வெட்டியிருந்தால் கூட சந்தோஷமாக போய் சேர்ந்திருப்பேன். ஆனால், சிலரை துாண்டிவிட்டு ஒவ்வொரு நாளும் என்னை அவமானப்படுத்துகிறான். அன்புமணியை மாற்ற முடியாது.
தற்போது, 95 சதவீத பா.ம.க.,வினர் என் பின்னால்தான் இருக்கின்றனர். அன்புமணி பின்னால், 5 சதவீதம் பேர்கூட இல்லை. ஆனால், கோடிக்கணக்கில் செலவு செய்து, கூட்டத்தை கூட்டி பம்மாத்து வேலை செய்து வருகின்றனர். வரும் தேர்தலில் அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கும்.
சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கான காலம் இன்னும் கனியவில்லை. கடந்த சில வாரங்களாக மாவட்டச் செயலர்களை அழைத்து, யாருடன் கூட்டணி அமைக்கலாம் என கருத்து கேட்டு வருகிறேன்.
அதன் அடிப்படையில் கண்டிப்பாக வெற்றி கூட்டணி அமைப்பேன். நான் நினைப்பது நிச்சயமாக நடக்கும் சூழல் வந்திருக்கிறது. சில நேரங்களில், துாக்க மாத்திரை போட்டாலும் துாக்கம் வருவதில்லை; அன்புமணி நினைவு வந்து விடுகிறது. பொதுக்குழு கூட்டத்துக்கு மண்டபத்தை கொடுக்கக்கூடாது என நடந்த சூழ்ச்சியையும் முறியடித்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
அன்புமணி குறித்து ராமதாஸ் பேசுகையில், மிகவும் உணர்ச்சிவயப்பட்டு, விம்மி அழுது, கண்ணீர் விட்டார். அவர் அருகில் இருந்த கட்சியின் செயல் தலைவரான அவரது மகள் ஸ்ரீ காந்தியும், கவுரவ தலைவரான ஜி.கே.மணியும், ராமதாஸ் கைகளை பிடித்து தேற்றினர்.

