வீட்டுக்கடன் கிடைப்பது ரொம்ப 'ஈசி' திட்டமிடலேன்னா போய் விடும் குஷி!
வீட்டுக்கடன் கிடைப்பது ரொம்ப 'ஈசி' திட்டமிடலேன்னா போய் விடும் குஷி!
ADDED : செப் 28, 2024 05:10 AM

இப்போதெல்லாம் வீட்டுக் கடன்கள் மிக சுலபமாக கிடைக்கின்றன. வங்கிகளும், வீட்டுக் கடன் உதவி அளிக்கும் நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு கடன் வழங்குகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, இப்போது கடன்களுக்கு வட்டி விகிதம் மிகக் குறைவு.
உங்களின் மொத்த கட்டுமானத்திற்கு ஆகும் செலவில், 80 முதல் 85 சதவீதம் நீங்கள் கடனாக பெறலாம். நிலம் மற்றும் வீட்டு சொத்துக்கள் வாங்க, புதிய கட்டுமானங்கள் புதுப்பித்தல் அல்லது விரிவுபடுத்துதல் போன்றவற்றிற்காக, கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது:
'பட்ஜெட்' அடிப்படையில் நீங்கள் பெற விரும்பும் கடன் பற்றி, ஓர் திட்டமிடல் தேவை. உங்கள் சேமிப்பில் இருந்து எவ்வளவு தொகை செலவழிக்க முடியும் என்பதை, தீர்மானிக்க வேண்டும். இல்லையேல் செலவு நீண்டுகொண்டே செல்லும்.
கடன் வாங்குபவரின் சொந்த பங்காக மொத்த கட்டுமானத்தில், 15 முதல், 20 சதவீதம் வரை முதலில் தயார் செய்துகொள்ளப்பட வேண்டும் என்றே வங்கிகளும், வீட்டுக்கடன் உதவி அளிக்கும் நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன.
அதன்பின், கடன் வாங்குபவரின் ஆண்டு வருமானம் மற்றும் திருப்பி செலுத்தும் திறன் போன்றவற்றில், வங்கியின் மதிப்பீட்டின்கீழ், மீதி கடன் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. உண்மையில், உங்களால் எந்த அளவுக்கு திருப்பி செலுத்த முடியும், அதில் உங்கள் திறன் என்ன என்பது பற்றி திட்டமிடுங்கள்.
உங்கள் கடன், சம மாத தவணைகளில்(இ.எம்.ஐ.,) திருப்பி செலுத்தப்பட வேண்டும். எந்த அளவுக்கு நீண்ட காலம் திருப்பி செலுத்துகிறீர்களோ, அந்த அளவுக்கு மாத தவணை குறைவாக இருக்கும்.
வெவ்வேறு வங்கிகளில் வழங்கும், வீட்டுக்கடன் திட்டங்கள் மற்றும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கடன் தொகை மற்றும் திருப்பி செலுத்தும் காலவரம்பை பொறுத்து, இவை மாறுபடலாம். கடனுக்கு சம்பந்தப்பட்டுள்ள அனைத்து கட்டணங்கள் மற்றும் செலவுகளை சரிபார்ப்பது அவசியம்.
அவற்றில் நிர்வாக மற்றும் பரிசீலனை கட்டணங்கள், கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்க, ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வங்கிகள் விதிக்கின்றன. சில வங்கிகள் முகவரி மற்றும் சட்ட சம்பந்தமான விஷயங்களை, விசாரிக்கக்கூட கட்டணம் வசூலிக்கின்றன.
தங்களது கடன் திட்டங்களை கவர்ச்சிகரமானதாக்க, விபத்து காப்பீட்டை இலவசமாக அளிப்பது மற்றும் கடைசி இரண்டு தவணைகளை தள்ளுபடி செய்வது, போன்ற வங்கிகளின் கூடுதலான சலுகைகளையும், கவனித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர்கூறினார்.