காங்., - த.வெ.க., - வி.சி., கூட்டணி எம்.எல்.ஏ.,க்களிடம் கிரிஷ் சோடங்கர் பேச்சு
காங்., - த.வெ.க., - வி.சி., கூட்டணி எம்.எல்.ஏ.,க்களிடம் கிரிஷ் சோடங்கர் பேச்சு
ADDED : மே 16, 2025 04:04 AM

''சட்டசபை தேர்தலில், த.வெ.க., - விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் இணைந்து, காங்கிரஸ் ஏன் தனி அணி அமைக்கக்கூடாது' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கேள்வி எழுப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், கிராம கமிட்டி பொறுப்பாளர்கள், துணை அமைப்பு நிர்வாகிகள் கூட்டம், சென்னையில் நேற்று, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பேசியுள்ளதாவது:
காங்கிரஸ் வென்ற தொகுதிகள் மீது, அமைச்சர்கள் கண் வைக்கின்றனர். அந்த தொகுதிகளை ஒதுக்குவதில், தி.மு.க., நெருக்கடி தந்தால், மாற்று அணி உருவாக்க வேண்டும். விஜய் கட்சிக்கு இளைஞர்களிடமும், பெண்களிடமும் வரவேற்பு அதிகமாக உள்ளது.
மக்களின் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க., மீது அதிருப்தி அலை வீசுகிறது. வட மாவட்டங்களில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தோர் பா.ஜ.,வில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே, தென் மாவட்டங்களில் உள்ள காங்கிரசார், பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடித்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் பேசியதாக தெரிகிறது.
அதற்கு பதிலளித்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளதாவது:
எம்.எல்.ஏ.,க்கள் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு போராட வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் மீது நம்பிக்கை ஏற்படும்.
அரசு தவறுகளை துணிச்சலாக சுட்டிக்காட்ட வேண்டும். தி.மு.க., தரப்பில் நெருக்கடி தரும்பட்சத்தில், காங்கிரஸ், த.வெ.க., - வி.சி., கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம்.
கட்சியின் முன்னணி அமைப்புகளின் செயல்பாடுகள் மிகவும் குறைவாக உள்ளன. கட்சியில் இணையும் இளைஞர்கள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. வரும் 3 மாதங்களுக்குள் துணை அமைப்புகளில், காலியாக உள்ள அனைத்து கமிட்டிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.
- நமது நிருபர் -