யாருடன் கூட்டணி என தமிழக காங்., நிர்வாகிகளிடம் கிரிஷ் ஷோடங்கர் கருத்து கேட்பு
யாருடன் கூட்டணி என தமிழக காங்., நிர்வாகிகளிடம் கிரிஷ் ஷோடங்கர் கருத்து கேட்பு
ADDED : ஜன 03, 2026 04:31 AM

- நமது நிருபர் -
தி.மு.க.,வுடன் கூட்டணியா அல்லது த.வெ.க.,வுடன் கூட்டணியா என்பது குறித்து, இறுதி முடிவு எடுப்பதற்காக, தமிழக காங்., நிர்வாகிகளிடம், கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் இன்றும், நாளையும், சத்தியமூர்த்தி பவனில் கருத்து கேட்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வரும் நிலையில், தி.மு.க., -- காங்கிரஸ் கூட்டணியில், கருத்து மோதல் வலுத்து வருகிறது.
தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்றால், 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும்' என, காங்கிரசார் போர்க் கொடி துாக்கி உள்ளனர்.
காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, உத்தரப்பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் தொகை அதிகமாகவும், கவலைக்கிடமான நிலைமையில் இருப்பதாகவும் விமர்சித்தது, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இரு கோஷ்டிகள்
பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தி.மு.க., அமைச்சர்களும், கூட்டணி கட்சி எம்.பி.,க்களும், காங்கிரஸ் டில்லி மேலிடத்திடம் வலியுறுத்தினர்.
அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி.,மாணிக்கம் தாகூர், 'காங்கிரஸ் உட்கட்சி விவகாரத்தை, கூட்டணி கட்சிகள் யாரும் விமர்சித்து பேச வேண்டாம். லட்சுமணன் ரேகையை யாரும் தாண்ட வேண்டாம்' என, அறிக்கை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியில் பிரவீன் சக்கரவர்த்தி ஆதரவு, எதிர்ப்பு என, இரு கோஷ்டிகள் உருவாகி உள்ளன. ஆதரவு கோஷ்டி, த.வெ.க.,வுடன் கூட்டணி வைக்கலாம் எனக்கூற, எதிர்ப்பு கோஷ்டி, தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகிறது. இதனால், யாருடன் கூட்டணி என குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இறுதி முடிவு
இது குறித்து முடிவு செய்வதற்காக, காங்கிரஸ் கட்சியின் அனைத்து தரப்பு அமைப்புகளின் நிர்வாகிகளை, கட்சி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் சந்தித்து பேச உள்ளார். அவர் கோவாவிலிருந்து நேற்று இரவு சென்னை வந்தார். இன்றும், நாளையும், சென்னையில் தங்கி, நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்கிறார்.
இது குறித்து, காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலினிடம், தொகுதி பங்கீடு தொடர்பாக, காங்கிரஸ் ஐவர் குழு பேச்சு நடத்தி, இன்றுடன் 30 நாட்கள் முடிவடைகிறது. தி.மு.க., முடிவை 15 நாட்களில் தெரிவிக்க வேண்டும் என, கிரிஷ் ஷோடங்கர் ஏற்கனவே கேட்டுக் கொண்டார். ஆனால், தேர்தல் தேதி அறிவித்த பின், தொகுதி பங்கீடு குழு அமைத்து பேச்சு நடத்துவோம் என தி.மு.க., தரப்பில் அறிவித்து விட்டனர்.
இன்றும் நாளையும் சத்தியமூர்த்தி பவனில் இருந்தபடி, காங்கிரசின் பல்வேறு நிலை நிர்வாகிகளையும் சந்தித்து கருத்து கேட்கும் ஷோடங்கர், அதை தொகுத்து, டில்லி மேலிடத்திடம் தெரிவிக்க உள்ளார். அதன்பின் கூட்டணி குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

