சிறுமி தற்கொலை விவகாரம்: 'ஜெம்' வீரமணியிடம் விசாரணை
சிறுமி தற்கொலை விவகாரம்: 'ஜெம்' வீரமணியிடம் விசாரணை
ADDED : செப் 30, 2026 05:42 AM

சென்னை: சென்னையை சேர்ந்த, 16 வயது சிறுமி தற்கொலை செய்தது தொடர்பாக, தொழில் வர்த்தகர் வீரமணியிடம், 85, போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறுமியரை பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக, 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனத்தின் தொழில் வர்த்தகர் வீரமணி கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். மேலும் மூவர் புகார் இவர் மீது, சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:
கல்வி கற்பதற்கான உதவி செய்வது போல, என், 16 வயது மகளை வீரமணி பாலியல் வன்முறை செய்துவிட்டார். இவரால், என் மகள் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தேன். வீரமணியின் பண பலத்தால் விசாரணையை முடக்கிவிட்டனர். இவ்வாறு, புகாரில் கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக, வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவி தற்கொலை செய்தது தொடர் பாக, வீரமணியிடம் போலீ சார் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், அவரை மீண்டும் கைது செய்து, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்காக, தமிழக அரசு நியமித்த சிறப்பு புலனாய்வு குழு பெண் அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கவும், தங்களிடம் உள்ள ஆதாரங்களை அளிப்பதற்கும், 'வாட்ஸாப்' எண் ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டனர். நேற்று வாட்ஸாப் எண் மூலம் மூன்று பேர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அச்சுறுத்தல்
இதற்கிடையே, 'ஜெம்' வீரமணியுடன் கைதான சாந்தியும், அவரது கணவர் மகேந்திர சிம்ஹனும் ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், ஜாமின் வழங்கக்கூடாது.
'பாதிக்கப்பட்ட சிறுமியரை அடையாளம் காண வேண்டி உள்ளதால், இருவரையும் ஜாமினில் விடுவித்தால் சாட்சிகளை கலைக்கவும், பாதிக்கப்பட்ட சிறுமியர் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தவும் வாய்ப்புள்ளது' என, வாதிட்டார்.
காவல் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், 'வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்காக, வீரமணியிடம் இருந்து சாந்தி, 24.63 லட்சம் ரூபாய் பெற்றுஉள்ளார். 'அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை, தடயவியல் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது' என்று, கூறப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்து, நீதிபதி பத்மா உத்தரவிட்டார்.
'தொழிலதிபர் 'ஜெம்' வீரமணி மீதான, பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவரை, தி.மு.க., பாதுகாத்ததாக கூறிய முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோருக்கு, 'சம்மன்' அனுப்பி விசாரிக்கும்படி, சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
