கொடுப்பதோ 70,000 டோக்கன்; பதிவாவதோ 11,000 பத்திரங்கள்: பதிவு குறைவால் அதிகாரிகள் கவலை
கொடுப்பதோ 70,000 டோக்கன்; பதிவாவதோ 11,000 பத்திரங்கள்: பதிவு குறைவால் அதிகாரிகள் கவலை
ADDED : செப் 23, 2024 01:58 AM

சார் -- பதிவாளர் அலுவலகங்களில் வழங்கப்படும் டோக்கன்களில், பாதிக்கும் குறைவாகவே பத்திரங்கள் பதிவாவது, உயரதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு, பதிவுத்துறை வருவாய் பிரதானமாக உள்ளதால், அவற்றை அதிகரிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பதிவுத்துறை பணிகள் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்காக, 'ஸ்டார் 2.0' சாப்ட்வேர் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, சொத்து பரிமாற்றத்திற்கான அனைத்து விபரங்களையும், ஆன்லைன் வாயிலாக உள்ளீடு செய்ய வேண்டும்; அதனடிப்படையில், கட்டணம் தெரிவிக்கப்படும்.
இந்த பணிகள் முடிந்தால் தான், பத்திரப்பதிவுக்கான நேரம் ஒதுக்கி டோக்கன் தரப்படுகிறது. அரைகுறை விபரங்கள் அளித்தால் டோக்கன் கிடைக்காது.
இந்நிலையில், சார் - பதிவாளர் அலுவலகங்களில், பதிவுக்கேற்ப தினமும் 120 முதல் 300 டோக்கன்கள் என, மாநிலம் முழுதும் 70,000 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. டோக்கன்களின் ஆயுள் காலம் அன்றே முடிந்து விடும்.
தமிழகத்தில் 2023 - 24ம் நிதியாண்டில், 33.22 லட்சம் பத்திரங்கள் பதிவாகின. இதன்படி, தினமும் 11,000 பத்திரங்கள் பதிவானது தெரிகிறது.
இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு நாளைக்கு சராசரியாக, 70,000 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில், தவிர்க்க முடியாத காரணங்கள் மற்றும் பத்திரத்தில் குறைபாடு போன்றவற்றால், 20 சதவீத பத்திரங்கள் பதிவாகாமல் போகலாம்.
குறைந்தபட்சம், 60 சதவீதமாவது பதிவாக வேண்டும். ஆனால், டோக்கன்களில் பாதியை கூட எட்ட முடியாதது ஏன் என்று தெரியவில்லை.
பெரும்பாலான இடங்களில் பதிவுக்கு பத்திரங்கள் தகுதியாக இருந்தாலும், வாய்மொழியாக கூடுதல் விபரம் கேட்டு, திருப்பி அனுப்புவதாக புகார்கள் வருகின்றன.
சார் - பதிவாளர் அலுவலக நடவடிக்கைகளை, நேரலையில் ஆய்வு செய்ய வசதி உள்ளது. இதை பயன்படுத்தி, பத்திரங்கள் குறைவதற்கான காரணங்களை துல்லியமாக ஆராய்ந்தால், பத்திரப்பதிவு எண்ணிக்கை யும், வருவாயும் இரு மடங்காக உயரும்.
இவ்வாறு அவர் கூறினார்
-- நமது நிருபர் --.