அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அதிருப்தியை போக்க அரசு நடவடிக்கை: அமைச்சர்கள் குழு மீண்டும் பேச்சு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அதிருப்தியை போக்க அரசு நடவடிக்கை: அமைச்சர்கள் குழு மீண்டும் பேச்சு
ADDED : டிச 20, 2025 05:55 AM

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அதிருப்தியை போக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மூத்த அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலான குழுவினர், நாளை மறுநாள் சென்னையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினரை அழைத்து, மீண்டும் பேச்சு நடத்த உள்ளனர்.
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும்' என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள், கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.,வால் அளிக்கப்பட்டன. ஆட்சி காலம் முடியவுள்ள நிலையில், பல கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். நாள்தோறும் எங்காவது ஒரு இடத்தில், இந்த கோரிக்கைளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சட்டசபை தேர்தல் மூன்று மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சமரசம் செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு, ஆளும் கட்சி தள்ளப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக, கடந்த பிப்ரவரியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் இடம்பெற்ற குழுவினர், சென்னை தலைமை செயலகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினரை அழைத்துப் பேசினர்.
அதன் அடிப்படையில், ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு இடைக்கால அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதிலுள்ள பரிந்துரைகளை செயல்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இறுதி அறிக்கை வெளியீடு தாமதமாவதால், பழைய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களிடம், நாளை மறுநாள், எ.வ.வேலு தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் மீண்டும் பேச்சு நடத்த உள்ளனர்.
தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டடத்தில், இந்த சந்திப்பு நடக்க உள்ளதாக, அரசு அறிவித்துள்ளது.

