வனம் அருகே வாழ்வோருக்கு ஏ.ஐ., கேமரா, முள் கழுத்துப்பட்டை: விலங்குகள் தாக்குதலை தடுக்க அரசு ஏற்பாடு
வனம் அருகே வாழ்வோருக்கு ஏ.ஐ., கேமரா, முள் கழுத்துப்பட்டை: விலங்குகள் தாக்குதலை தடுக்க அரசு ஏற்பாடு
ADDED : பிப் 16, 2025 11:28 PM

புனே: மஹாராஷ்டிராவில் வனத்துறை அருகில் உள்ள குடியிருப்புகளில் சிறுத்தை தாக்குதலை தடுக்க ஏ.ஐ., கேமரா, சிறப்பு கழுத்துப்பட்டை உள்ளிட்ட நுாதன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் ஜூன்னர் நகரம் அமைந்துள்ளது. தேக்கு மரக்காடுகள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான அடர்ந்த காடுகளை ஒட்டி ஜூன்னர் நகரமும், புறநகரங்களும் அமைந்துள்ளன.
காடுகளில் இருந்து தண்ணீர், உணவு தேடி அவ்வப்போது, சிறுத்தை, யானை உள்ளிட்ட விலங்குகள் ஜூன்னர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நுழைவதை வாடிக்கையாக வைத்துள்ளன.
அவ்வாறு உள்ளே நுழையும் விலங்குகள் மனிதர்களை கொன்று விட்டு தப்புவதும் வாடிக்கையாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், சிறுத்தை தாக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக வனத் துறை தெரிவித்துள்ளது. ஊருக்குள் புகுந்து நாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க உரிய நடவடிக்கைகளை வனத்துறை எடுத்து வருகிறது.
அதன்படி, நவீன தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள வீடுகள், தோட்டங்களில் சூரியசக்தி வாயிலாக மின்சாரம் பெறும் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலியில் மோதும் விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில், அவை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஷாக் அடிப்பது போன்ற உணர்வை, ஒருவித சத்தத்துடன் இந்த வேலிகள் ஏற்படுத்துவதால், அதற்கு பயந்து சிறுத்தை ஓடும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் நிறுவப்பட்டு உள்ளன. இந்த கேமராக்கள் சிறுத்தையை படம்பிடிக்கும் பட்சத்தில் அபாய ஒலியை எழுப்பும். இதற்கு பயந்து சிறுத்தை ஓடும் என கூறப்படுகிறது.
பொதுவாக சிறுத்தைகள் மனிதனின் கழுத்துப் பகுதியை கவ்வுவதையே வழக்கமாக வைத்துள்ளதால், கூரிய முட்கள் அடங்கிய கழுத்துப் பட்டைகள் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை அணிந்து வயல்வெளிகளில் கிராம மக்கள் வேலை செய்து வருகின்றனர்.

