முறையாக சமைக்காத இறைச்சி, பாலில் பாக்டீரியா பாதுகாப்பற்ற நீர், ஐஸ் கட்டிகளை பயன்படுத்தாதீர்கள்
முறையாக சமைக்காத இறைச்சி, பாலில் பாக்டீரியா பாதுகாப்பற்ற நீர், ஐஸ் கட்டிகளை பயன்படுத்தாதீர்கள்
ADDED : பிப் 06, 2025 01:02 AM

சென்னை: 'முறையாக சமைக்காத இறைச்சி, பாலில் இருக்கும், 'கேம்பை லோபாக்டர் ஜெஜுனி' பாக்டீரியா, 'கிலன் பா சிண்ட்ரோம்' நோயை ஏற்படுத்தும்' என, அரசு டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில், கிலன் பா சிண்ட்ரோம் என்ற நரம்பு வாத நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.
தமிழகத்திலும், ஜி.பி.எஸ்., பாதிப்பு ஒரு சிலருக்கு இருந்தாலும், ஒரே பகுதியில் அதிக மக்கள் பாதிக்கப்படவில்லை என, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஜி.பி.எஸ்., நோயால் பாதிக்கப்பட்ட, திருவள்ளூரை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன், சமீபத்தில் உயிரிழந்தான்.
இந்நிலையில், 'ஜி.பி.எஸ்., நோய் பாதிப்பு ஏற்படுத்தும், 'கேம்பை லோபாக்டர் ஜெஜுனி' பாக்டீரியா, நீர், உணவு உள்ளிட்டவையில் காணப்படுவதால், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, மக்களுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
மூன்றில் ஒரு பங்கு
இதுகுறித்து, சிவகங்கை அரசு பொது நல டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:
மிகவும் அரிதான இந்நோய் பாதிப்பு, ஆரம்பத்தில் உள்ளங்கை மற்றும் பாதத்தில் குத்துவது போன்றும், மந்தமான உணர்வும் ஏற்படலாம்.
பின், நாளடைவில் தசைகள் தளர்ந்து, நடக்க முடியாமல், கைகளை அசைக்க இயலாமல், பக்கவாதத்தை ஏற்படுத்தும். ஜி.பி.எஸ்., பாதிப்புகளில், மூன்றில் ஒரு பங்கு, 'கேம்பை லோபாக்டர் ஜெஜுனி' என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
இந்த பாக்டீரியா, முறையாக சமைக்கப்படாத இறைச்சி, முறையாக காய்ச்சப்படாத பால் ஆகியவற்றில் அதிகம் காணப்படுகிறது. எனவே, பாலை நன்றாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். அதேபோல், மாமிசத்தை, 70 டிகிரி செல்ஷியசுக்கு, வேக வைப்பது அவசியம். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். இறைச்சிகள் சாப்பிடும்போது, சூடாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
புனேவில் ஏற்பட்ட பாதிப்புக்கு, தண்ணீரில் இருந்த, 'கேம்பை லோபாக்டர் ஜெஜுனி' பாக்டீரியா தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த பாக்டீரியா, 10,000 பேரில், ஒருவருக்கு, ஜி.பி.எஸ்., பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால், வயிற்று ப்போக்கு, வயிறு வலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு குணமாகும்.
எதிர்ப்பு சக்தி
ஆனால், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர் மற்றும் முதியோருக்கு, தீவிர பாதிப்பை ஏற்படுத்தலாம். ஒருவருக்கு வைரஸ், பாக்டீரியா போன்ற தொற்றுகள் ஏற்படும்போது, அக்கிருமிகளுக்கு எதிராக, உடலின் எதிர்ப்பு சக்தி வேலை செய்யும்.
அப்போது, அக்கிருமிகள் போலவே இருக்கும், நரம்புகளின் வெளிப்புற பூச்சுகளையும் சேர்ந்தே தாக்கி விடுகின்றன. இவற்றை, 'மாலிக்யுலர் மிமிக்ரி' என, அழைக்கிறோம்.
உடலின் எதிர்ப்பு சக்தி, அந்த பாக்டீரியாவை அழிக்கும்போது, உருவ ஒற்றுமை கொண்ட நரம்பு செல்களையும் சேர்த்து தாக்குவதால், நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, வாதநோய் ஏற்படுகிறது. மூச்சு விடுவதற்கு தேவையான தசைகளும் தளர்ச்சி அடைவதால், சுவாச செயலிழப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்நோய் பாதிக்கப்பட்டவர்களில், 20 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, பாதுகாப்பற்ற நீரை பருகாதீர்கள். பாதுகாக்கப்பட்ட நீரில் செய்யப்பட்ட, ஐஸ் கட்டிகள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.

