அரசு பணியாளர்கள் போராட்டம் தீவிரம்: டாஸ்மாக், சத்துணவு ஊழியர்கள் கைது
அரசு பணியாளர்கள் போராட்டம் தீவிரம்: டாஸ்மாக், சத்துணவு ஊழியர்கள் கைது
ADDED : பிப் 04, 2026 06:25 AM

சென்னை: மதுக்கடைகளில் பணிபுரிவோரை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், குடும்பத்துடன் நேற்று கோட்டையை முற்றுகையிட சென்ற டாஸ்மாக் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் ஊழியர்கள், சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அருகில் இருந்து, நேற்று காலை குடும்பத்துடன், தலைமைச் செயலகம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, சங்க பொதுச்செயலர் தனசேகரன் கூறியதாவது: டாஸ்மாக் மதுக்கடைகளில், 22 ஆண்டுகளுக்கு மேல், மிகக்குறைந்த ஊதியத்தில், 25,000க்கும் அதிகமான மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பணி புரிகின்றனர். இத்தனை ஆண்டுகளாகியும், பணியாளர்களுக்கான பணி விதிகள் உருவாக்கப்படவில்லை. வார விடுமுறை, பண்டிகை விடுமுறை வழங்கப்படுவதில்லை.
பணியாளர்களை பணிநிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதற்கு உத்தரவாதம் அளித்தால் மட்டுமே, மீண்டும் வேலைக்கு திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

