சீன 'சிசிடிவி' நிறுவனங்களுக்கு தடை விதிக்க அரசு திட்டம்
சீன 'சிசிடிவி' நிறுவனங்களுக்கு தடை விதிக்க அரசு திட்டம்
ADDED : செப் 29, 2024 12:17 AM

புதுடில்லி: லெபனானில் பேஜர் வாயிலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நம் நாட்டில் கண்காணிப்பு கேமரா தயாரிப்புகளுக்கான புதிய கொள்கையை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதன் வாயிலாக இந்திய சந்தையில் இருந்து சீன நிறுவன கண்காணிப்பு கேமராக்களை வெளியேற்ற உள்ளனர்.
மத்திய அரசு கடந்த மார்ச்சில், 'சிசிடிவி' எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் குறித்த புதிய கொள்கையை வெளியிட்டது. சிசிடிவி கேமராக்கள் நாடு முழுதும் முக்கியமான இடங்களில் நிறுவப்பட்டு கண்காணிக்க பயன்படுத்தப்படுகின்றன.
சிசிடிவி கேமரா நிறுவனங்கள் நினைத்தால், அவற்றை ஹேக் செய்து தகவல்களை திருட வாய்ப்பு இருக்கும் என்பதால், உள்நாட்டு மற்றும் நம்பகமான நாடுகளின் நிறுவனங்களை மட்டும் இத்தொழிலில் அனுமதிப்பது என, அரசின் புதிய கொள்கையில் முடிவு செய்துள்ளனர்.
தற்போது, இந்திய சிசிடிவி சந்தையில் சிபி பிளஸ், ஹிக்விஷன், தாஹுவா ஆகிய மூன்று நிறுவனங்கள், 60 சதவீத சந்தையை கைப்பற்றி உள்ளன.
அவற்றில், ஹிக்விஷன் மற்றும் தாஹுவா ஆகிய இரண்டும் சீன நிறுவனங்கள். இந்நிறுவனங்களால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கூறி, 2022ல் அமெரிக்க தொலைதொடர்பு கமிஷன் இவற்றின் விற்பனைக்கு அங்கு தடை விதித்தது.
இந்நிலையில், லெபனானில் பேஜர் தாக்குதல் நடந்திருப்பதால், விரைவில் சிசிடிவிக்கான புதிய கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு மும்முரம் காட்டி வருவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் வாயிலாக இந்திய நிறுவனங்கள் பயன்பெறும்.