போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு தர வேண்டியது ரூ.50,000 கோடி; மார்க்சிஸ்ட் தொழிற்சங்கம் தகவல்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு தர வேண்டியது ரூ.50,000 கோடி; மார்க்சிஸ்ட் தொழிற்சங்கம் தகவல்
ADDED : மார் 07, 2025 08:13 AM

சென்னை: புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோட்டை நோக்கி பேரணி நடத்த முயன்ற போக்கு வரத்து ஊழியர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர்.
புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்; போக்குவரத்து துறையை மேம்படுத்த, பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று போக்குவரத்து ஊழியர்கள் கோட்டை நோக்கி பேரணி சென்றனர். அதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன், பல்லவன் இல்லத்தில் துவக்கி வைத்தார். சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த பேரணி துவங்கிய சில நிமிடங்களில், போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். பின், போக்குவரத்து துறை செயலருடன் பேச்சு நடத்த, தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து சென்றனர். இது குறித்து, சவுந்தரராஜன் அளித்த பேட்டி: போக்குவரத்து தொழிலாளர்கள், தமிழக அரசால் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.
போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த, அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, இன்றைய முதல்வர் ஸ்டாலின் என்ன கோரிக்கை வைத்தாரோ, அதை அவர் நிறைவேற்ற வேண்டும்.வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை வழங்காமல், போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. மினி பஸ்சை தனியார் இயக்க முடியும் என்றால், ஏன் போக்குவரத்து கழகங்களால் இயக்க முடியாது?
தற்போது, பஸ்கள் ஓடக்கூடிய அதே வழித்தடத்தில், மினி பஸ்களை இயக்க உள்ளனர். தனியார்மய நடவடிக்கையை கைவிட வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கைகளை, பட்ஜெட்டில் அரசு நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம்.
மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக, கடுமையான போராட்டங்களுக்கு செல்லாமல் உள்ளோம். இதை பலவீனமாக கருதினால், அதற்கான பதிலை தருவோம். மத்திய அரசு பணம் தரவில்லை என்று மாநில அரசு கேட்பது நியாயமானது.
ஆனால், மாநில அரசு, போக்குவரத்து தொழிலாளர்களின் பணத்தை ஆண்டுக்கணக்கில் கொடுக்காமல் உள்ளது; இதை ஏன் உணர மறுக்கிறது? தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த, 15,000 கோடி ரூபாய், இழப்பீடு இன்னும் பிற வகைகள் என, 50,000 கோடி ரூபாய் அளவுக்கு அரசு தர வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.