கவர்னர் ஒரு இடம்; முதல்வர் ஒரு இடம்:காந்தி நினைவு நாளில் தான் இப்படி!
கவர்னர் ஒரு இடம்; முதல்வர் ஒரு இடம்:காந்தி நினைவு நாளில் தான் இப்படி!
UPDATED : ஜன 31, 2025 11:19 AM
ADDED : ஜன 31, 2025 01:12 AM

சென்னை: தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையில், மோதல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று காந்தி நினைவு தினத்தில், இருவரும் தனித்தனியே நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே, கொள்கை ரீதியாக மோதல் ஏற்பட்டுள்ளது. அரசின் செயல்பாடுகளை, கவர்னர் அவ்வப்போது விமர்சித்து வருகிறார். அதற்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். ஆளும் கட்சியான தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலியும், கவர்னரை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் காந்தி நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே நடக்கும் நிகழ்வில், கவர்னரும், முதல்வரும் பங்கேற்பர். கடந்த ஆண்டு அப்பகுதியில், மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால், சென்னை அருங்காட்சியகத்தில், காந்தி சிலை அருகே, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், கவர்னரும், முதல்வரும் பங்கேற்றனர்.
தற்போது இருவருக்கும் இடையே, கருத்து மோதல் அதிகரித்துள்ள நிலையில், நேற்று அருங்காட்சியகத்தில், காந்தி சிலை அருகே, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, அவரது உருவ படத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் மலர் துாவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு வராத கவர்னர் ரவி, கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்திற்கு சென்றார். அங்கு காந்தி சிலைக்கு, மலர் துாவி மரியாதை செலுத்தினார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யா பவன் மாணவர்கள், பாரதம் குறித்த தேசபக்தி பாடல்கள், காந்தி பஜனைப் பாடல்களை பாடினர். சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை கவுரவிக்கும் வகையில், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை, கவர்னர் ரவியின் முதன்மைச் செயலர் கிர்லோஷ் குமார் வாசிக்க, அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சென்னை, ஜன. ௩௧-