51 கேள்விகளுடன் அரசு 'சர்வே': 'பல்ஸ்' பார்க்கிறது உளவு போலீஸ்
51 கேள்விகளுடன் அரசு 'சர்வே': 'பல்ஸ்' பார்க்கிறது உளவு போலீஸ்
ADDED : பிப் 04, 2024 03:21 AM

தமிழக உளவுத் துறை போலீசார், கடந்த 10 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுதும் 'சர்வே' எடுத்து வருகின்றனர்.
ஆட்சி மேலிடத்தில் இருப்போர் ஆலோசனைப்படி, உளவுத் துறை தலைவர் தயாரித்திருக்கும் படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் 51 கேள்விகளுக்கு விடை தேடி, பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் வேறுபட்ட மனிதர்களை சந்தித்து, விபரங்கள்திரட்டப்படுகின்றன.
தனியார் மற்றும் கட்சி யின் மேலிட பிரமுகர்கள் நடத்தும் நிறுவனங்கள் வாயிலாக ஏற்கனவே சர்வேக்கள் எடுக்கப்பட்டுள்ளன.
லேட்டஸ்டாக உளவுத்துறை போலீசாரும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
படிவத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கேள்விகள்:
தொகுதி எம்.பி., தொடர்ச்சியான மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கிறாரா?
மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில், மக்களை சந்திக்க வந்தாரா?
பொது நிகழ்ச்சிகளில் எம்.பி.,யை பார்க்க முடிந்ததா?
அவரை எளிதில்சந்திக்க முடிந்ததா?
தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னை என்ன? அது எம்.பி., கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதா?
தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படும் இயக்கம் எது?
தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
முதல்வர் செயல்பாடு எப்படி உள்ளது; அமைச்சர் உதயநிதி செயல்பாடு எப்படி?
நலத் திட்டங்கள், உரியவரை சென்று சேருகிறதா?
அண்ணாமலை செயல்பாடு எப்படி உள்ளது?
அவருடைய செயல்பாடுகளை ஆதரிக்கிறீர்களா... வெறுக்கிறீர்களா?
மத்திய அரசு திட்டங்களால் ஏதேனும் பயன் உள்ளதா?
நடிகர் விஜய் கட்சித் துவங்கும்பட்சத்தில், அவருக்கு ஆதரவு உண்டா?
தமிழக அரசிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன?
இப்படி 51 கேள்விகளுக்கும் தமிழகம் முழுதும் 25,000 பேரிடம் இருந்து விபரங்கள் பெறப்படுகின்றன.
வரும் 10க்குள் முழு விபரங்களையும் தொகுத்து மேலிடத்துக்கு அளிக்க இருப்பதாக உளவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன
- நமது நிருபர் - .