100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி மோசடி: குஜராத் பா.ஜ., அமைச்சரின் மகன் கைது
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.75 கோடி மோசடி: குஜராத் பா.ஜ., அமைச்சரின் மகன் கைது
UPDATED : மே 18, 2025 08:00 AM
ADDED : மே 18, 2025 01:24 AM

ஆமதாபாத்: குஜராத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளில், 75 கோடி ரூபாய் மோசடி நடந்தது தொடர்பாக, அம்மாநில அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாட் நேற்று கைது செய்யப்பட்டார்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள தோஹாத் மாவட்டத்தின் சில தாலுகாக்களில், 100 நாள் வேலை திட்டம் எனப்படும், 'மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தின்' கீழ் நடைபெற்ற பணிகளில், 160 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
போலி பணி நிறைவு
இதையடுத்து, மாவட்ட ஊரக மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தபோது, சாலைகள், தடுப்பணைகள், குளங்கள் போன்றவற்றை அமைக்காமலேயே, அமைத்தது போல் கணக்கு காட்டி பணம் பெற்றது தெரிந்தது.
கடந்த 2021 ஜனவரி முதல், 2024 டிசம்பர் வரை, இந்த பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கியதாக, 35 நிறுவனங்களுக்கு போலி பில்கள், போலி பணி நிறைவு சான்றிதழ்கள் வாயிலாக, 75 கோடி ரூபாய் மோசடியாக பணம் தரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒப்பந்ததாரர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, ஐந்து பேரை கடந்த மாதம் கைது செய்தனர்.
இந்நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்தகுஜராத் பஞ்சாயத்து மற்றும் வேளாண் அமைச்சர் பச்சுபாய் கபாடின் மகன் பல்வந்த் கபாடுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மோசடியாக பணம் பெற்ற நிறுவனங்களில் பல்வந்தின் நிறுவனமும் ஒன்று எனவும், பழங்குடியின மக்கள் வசிக்கும் தேவ்கத் பரியா, தன்பூர் ஆகிய தாலுகாக்களில் பணிகளை செய்யாமலேயே கோடிக்கணக்கில் பணத்தை பெற்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
தேவ்கத் பரியா சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், பல்வந்தின் தந்தையான அமைச்சர் பச்சுபாய்.
குற்றச்சாட்டு
இதையடுத்து, அமைச்சர் பச்சுபாயின் மூத்த மகன் பல்வந்தை நேற்று போலீசார் கைது செய்தனர். அவருடன், முறைகேடு நடந்த போது தாலுகா வளர்ச்சி அதிகாரியாக இருந்த தர்ஷன் படேல் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, அமைச்சர் பச்சுபாயின் இளைய மகன் கிரண் கபாட் தலைமறைவாகி விட்டார். 100 நாள் வேலை திட்டத்தில், 250 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சியான காங்., குற்றஞ்சாட்டி உள்ளது.
ஆனால், அரசு அதிகாரிகள், அமைச்சரின் மகன்கள் என சிக்கியுள்ள நிலையில், அரசு தரப்பில் இருந்தோ, அமைச்சரிடம் இருந்தோ எந்த விளக்கமும் வெளியாகவில்லை.