ஹரியானா சட்டசபை தேர்தல் பணிகளில் பா.ஜ சுணக்கம்! வேட்பாளர்களை அறிவித்து காங்., விறுவிறு
ஹரியானா சட்டசபை தேர்தல் பணிகளில் பா.ஜ சுணக்கம்! வேட்பாளர்களை அறிவித்து காங்., விறுவிறு
ADDED : செப் 04, 2024 12:31 AM

ஹரியானாவில், கடந்த இரு முறை ஆட்சியைப் பிடித்த ஆளும் பா.ஜ.,வுக்கு, இந்த முறை வெற்றி என்பது, மிகப்பெரிய சவாலாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம், எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஹரியானாவில், முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு, அக்., 5ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. அக்., 8ல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஹரியானாவை பொறுத்தவரை, கடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில், பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும், ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவுடன், மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி அமைத்தது.
தொகுதி பங்கீடு
விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், அரசுக்கு எதிரான மனநிலை உருவானது. இதை கவனத்தில் வைத்த பா.ஜ., மேலிடம், மனோகர் லால் கட்டாருக்கு பதில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நயாப் சிங் சைனியை முதல்வராக்கியது.
லோக்சபா தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஜனநாயக ஜனதா கூட்டணியை முறித்தது. எனினும், சுயேச்சைகள் ஆதரவு அளித்ததால், பா.ஜ., அரசு தப்பியது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார், லோக்சபா தேர்தலில் வென்றதை அடுத்து மத்திய அமைச்சராகி விட்டார்.
சவால்
இந்நிலையில், ஹரியானா சட்டசபை தேர்தல், அம்மாநிலத்தில் இதுவரை நடந்த தேர்தல்களைக் காட்டிலும், பா.ஜ.,வுக்கு மிகவும் சவாலாகவே இருக்கும் எனக் கூறப்படுகிறது.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சரும், பா.ஜ., தேசிய தலைவருமான நட்டா ஆகியோருடன், அக்கட்சியின் ஹரியானா தலைவர்கள் பலமுறை ஆலோசனை நடத்தி விட்டனர்.
எனினும், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கூட இன்னும் வெளியிடப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் 26 நாட்களே உள்ள நிலையில், பா.ஜ., சுணக்கம் காட்டி வருவது, அக்கட்சியினரை வருத்தமடையச் செய்துள்ளது.
ஆனால் எதிர்க்கட்சியான காங்., 34 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதில், 22 பேர் சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள்.
நெருக்கடி
'சட்டசபை தேர்தலில் சீட் வழங்கவில்லை என்றால், காங்., சார்பில் போட்டியிடுவேன்' என, பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராவ் நர்பீர் சிங் நெருக்கடி கொடுத்துள்ளார். இதேபோல, பல்வேறு நிர்வாகிகளும் குரல் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, காங்., சுறுசுறுப்பாக தேர்தல் பணி செய்து வரும் நிலையில், ஆளும் பா.ஜ., வேட்பாளர்களையே இன்னும் தேர்வு செய்யவில்லை.
அனைத்து தொகுதிகளுக்கும் விரைவில் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளை துவங்க வேண்டும் என்பதே, பா.ஜ.,வினரின் கோரிக்கையாக உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற கூடுதல் தகவல், அக்கட்சி தலைவர்களையும், தொண்டர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -