ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்தார்: தவெக - எம்எல்ஏ மீது பகீர்
ஓட்டுக்கு ரூ.2,000 கொடுத்தார்: தவெக - எம்எல்ஏ மீது பகீர்
ADDED : ஜூன் 05, 2026 06:08 AM

- நமது நிருபர் குழு -
'சேலம் மேற்கு தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ., ஓட்டுக்கு, 2,000 ரூபாய் கொடுத்தார்' என, ஓமலுார் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்ற வேட்பாளர் அதியமான் பேசிய வீடியோவால் சர்ச்சை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலுார் தொகுதி, த.வெ.க., வேட்பாளர் அதியமான், 97,707 ஓட்டுகள் பெற்ற நிலையில், 14,539 ஓட்டுகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் மணியிடம் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, ஓமலுாரில் நடந்த த.வெ.க., ஆலோசனை கூட்டத்தில், அதியமான், தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசினார். அதை, அக்கட்சியினரே வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பரப்பினர்.
வீடியோவில், 'என் தோல்விக்கு முக்கிய காரணம், சேலம் மேற்கு தொகுதி தான். அங்கு போட்டியிட்ட நம் கட்சி வேட்பாளர், 100 சதவீதம் அனைத்து இடங்களிலும் ஓட்டுக்கு, 2,000 ரூபாய் கொடுத்தார். இதனால் கடைசி இரு நாட்களில் என் தொகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. நான் மக்களை சந்தித்து நல்ல விஷயங்கள், திட்டங்களை கொண்டு சேர்த்தேன்.
'பக்கத்து தொகுதியில் பணம் கொடுத்ததால், என் உழைப்பு அனைத்தும், கடைசி இரு நாட்களில் வீணாகிப்போனது. இதனால் குறைந்தபட்சம், 5,000 முதல், 6,000 ஓட்டுகள் வரை கிடைக்காமல் போயிருக்கலாம்' என, பேசினார்.
'ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உடைத்துள்ளோம்' என, திருச்சியில் முதல்வர் விஜய் பேசிய நிலையில், சேலம் மேற்கு தொகுதி த.வெ.க., -- எம்.எல்.ஏ.,வான லட்சுமணன் மீது, சக கட்சி வேட்பாளர் கூறிய பகிரங்க குற்றச்சாட்டு, அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோல், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் பெயரை சொல்லி, கட்சி நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக, ஒரு ஆடியோ நேற்று முன்தினம் பரவியது. அதுவும், அவர்கள் கட்சியினரே வெளியிட்டுள்ளனர்.
'ரீல்ஸ்' வெளியிட்டு ஆட்சியை பிடித்தோம் என கூறும் த.வெ.க.,வினர், அதே பாணியில் உட்கட்சி பிரச்னைகளையும், 'ரீல்ஸ்' மோகத்தில் பரப்பி வருகின்றனர்.
