42 நாளில் 13,625 வழக்குகள்: முடித்து வைத்தது ஐகோர்ட்
42 நாளில் 13,625 வழக்குகள்: முடித்து வைத்தது ஐகோர்ட்
ADDED : நவ 30, 2025 07:25 AM

சென்னை: மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள, 13,625 வழக்குகளை, 42 வேலை நாட்களில் முடித்து வைத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி சாதனை படைத்துள்ளார்.
நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய, மூன்று ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்குகளை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, பிரத்யேகமாக நியமிக்கப்பட்டு இருந்தார். அதன் அடிப்படையில், மாவட்ட நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன.
அதாவது, மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக்கூடிய, 20,985 வழக்குகள், மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இந்த வழக்குகளை, கடந்த ஆக., 19ம் தேதி முதல் சிறப்பு அமர்வு நீதிபதியான டி.பரத சக்கரவர்த்தி, விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
கடந்த அக்., 29ம் தேதி வரை, 42 வேலை நாட்களில், 13,625 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகள், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் விசாரணைக்காக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில், விபத்து, திருட்டு, போராட்டம், சூதாட்டம், திருமணம் தொடர்பான வழக்குகளும் அடங்கும். இந்த வழக்குகளை முடிப்பதற்காக, அரசு வழக்கறிஞர்கள் எஸ்.சுகேந்திரன், கஸ்துாரி, வினோத் ஆகியோர், நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

