டிஜிட்டல் கைது மோசடி வழக்குகளை விசாரிக்க உயர்மட்ட குழு அமைப்பு
டிஜிட்டல் கைது மோசடி வழக்குகளை விசாரிக்க உயர்மட்ட குழு அமைப்பு
ADDED : அக் 31, 2024 02:24 AM

புதுடில்லி: டிஜிட்டல் கைது மோசடி மற்றும் 'ஆன்லைன்' மோசடி வழக்குகளை விசாரிக்க உயர்மட்டக் குழுவை அமைத்துள்ள மத்திய அரசு, இந்த வழக்குகளில் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அப்பாவி மக்களை, 'மொபைல் போன்' வாயிலாக தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் தங்களை சி.பி.ஐ., அமலாக்கத் துறை, ரிசர்வ் வங்கி, வருமான வரித் துறை போன்ற உயர்மட்ட விசாரணை அமைப்பில் இருந்து அழைப்பதாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நபர் மோசடி வழக்கில் சிக்கியிருப்பதாகக் கூறி மிரட்டி, அவரிடம் விசாரணை நடத்துவர். ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி விபரங்களையும் வாங்குகின்றனர்.
பல மணி நேரம் ஒரே இடத்தில் அவரை முடக்கி வைத்தபின், மோசடியில் இருந்து விடுபட, குறிப்பிட்ட தொகையை அவர்கள் கூறும் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி கூறுவர். இந்த வகையில், நாடு முழுதும் பலரிடம் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
வெவ்வேறு தற்காலிக இணையதள முகவரிகளை பயன்படுத்தி அரங்கேற்றப்படும் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாமல், சைபர் கிரைம் போலீசார் திணறி வருகின்றனர்.
இதுபோன்ற மோசடிகளுக்கு யாராவது ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் பிரிவின் கட்டணமில்லா உதவி எண் 1930ஐ தொடர்பு கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பான புகாரளிக்க www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடி குறித்த புகார்களை பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ், 14சி எனப்படும் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு மட்டும், இதுவரை டிஜிட்டல் கைது தொடர்பாக 6,000க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மோசடி தொடர்பாக சந்தேகிக்கப்படும் 6 லட்சம் மொபைல் எண்களை முடக்கியுள்ள 14சி, 709 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. சைபர் மோசடி தொடர்பாக 3.5 லட்சம் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிஜிட்டல் கைது மோசடி மற்றும் இணைய மோசடி வழக்குகளை விசாரிக்க உயர்மட்டக் குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலரால் இந்தக் குழு கண்காணிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள போலீஸ் தலைமையகத்தை தொடர்பு கொண்டு, இந்த குழு தொடர்பான விளக்கங்களை சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் அளித்து வருகிறது.