பிரிவினையை துாண்டும் முதல்வர்; ஹிந்து முன்னணி கண்டனம்
பிரிவினையை துாண்டும் முதல்வர்; ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : மே 18, 2025 11:10 PM

திருப்பூர் : “தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரிவினை யைத் துாண்டுவது போல் பேசுகிறார்,” என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'இது காவி நாடல்ல; திராவிட நாடு' என குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் ஆன்ம பலமே; ஆன்மிக பலம் தான் என்பதை உணராமல் பேசியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் மொழி பிரிவினையைப் பேசி, தமிழகத்தில் தேசிய சிந்தனையை எதிர்க்கும் நோக்கோடு தி.மு.க., செயல்பட்டு, காவியை எதிர்ப்பதாக சொல்லி, தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு ஓட்டு போட்ட ஹிந்துக்களின் மனதை புண்படுத்துகிறார் முதல்வர்.
காவி என்பது ஒரு கட்சியின் அடையாளம் அல்ல; காவி என்பது தியாகத்தின் அடையாளம். தேசிய கல்விக் கொள்கை குறித்து பேசுகையில், காவி என்ற புனித வார்த்தையை ஏதோ தீண்டத்தகாத வார்த்தை போல தமிழக முதல்வர் பேசியது கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஹிந்து மக்கள் எழுச்சி, அவரை இவ்வாறு பேச வைத்துள்ளது. அனைத்து மதத்தினருக்குமான முதல்வர், ஹிந்து மதம் மீது காட்டும் காழ்ப்புணர்ச்சி இது. தன் பேச்சை, முதல்வர் உடனே திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.