டில்லியில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்கள் வாடகைக்கு!: ஆடம்பர திருமணத்துக்கு திறந்து விட அரசு முடிவு
டில்லியில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்கள் வாடகைக்கு!: ஆடம்பர திருமணத்துக்கு திறந்து விட அரசு முடிவு
ADDED : நவ 15, 2025 11:16 PM

டில்லியில், வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னங்கள் அமைந்துள்ள இடங்களை, 'டெஸ்டினேஷன் வெட்டிங்' எனப்படும், பிரபலமான இடத்தை தேர்வு செய்து, திருமணம் நடத்த விரும்புவோருக்கு வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்ட டில்லி அரசு முடிவு செய்துள்ளது. தலைநகர் டில்லியை சுற்றி, முகலாயர் காலத்து வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன.
அவற்றில், 75 நினைவுச் சின்னங்கள் டில்லி அரசின் தொல்லியல் துறை வசம் உள்ளது. டில்லியை சுற்றி அமைந்துள்ள தாஜ்மஹால் உள்ளிட்ட பல நினைவுச் சின்னங்கள் இந்திய தொல்லியல் துறை பராமரிப்பின் கீழ் உள்ளது.
அனுமதி இந்நிலையில், டில்லி அரசு தன் கட்டுப்பாட்டில் உள்ள நி னைவுச் சின்னங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, கலாசார விழாக்கள் மற்றும் திருமணம் போன்ற தனியார் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது.
இதை அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் மூலம் செயல் படுத்த உள்ளனர். இதற்காக அனைத்து நினைவுச் சின்னங்களிலும் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தும் பணிகளை டில்லி சுற்றுலா அமைச்சகம் செய்து வருகிறது.
இதுகுறித்து சுற்றுலா துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரலாற்றின் அழகும், நவீன வசதிகளும் ஒருசேர கிடைக்கும் இடமாக டில்லி நகரை மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கம். ஆடம்பர திருமண சந்தைக்கு என்று டில்லியில் ஏற்கனவே பண்ணை வீடுகள், நட்சத்திர ஹோட்டல்கள், பெரிய மண்ட பங்கள் உள்ளன.
ஆனால் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களில் திருமணம் செய்ய வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அந்த இடங்களுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிப்பதும் அதிகரித்துள்ளன.
ஆனால், அனுமதி பெறுவதற்கு பல முட்டுக்கட்டைகள் உள்ளன.
எனவே டில்லி அரசு வரலாற்று பாரம்பரிய சின்னங்களை கலாசார மற்றும் திருமண விழாக்களுக்கு வாடகைக்கு விடும் திட்டத்தை துவங்க உள்ளது. பதிவு கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளிக்கவும் பரிசீலித்து வருகின்றனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இந்த திட்டத்துக்காக டில்லி தொல்லியல் துறை வசம் உள்ள வரலாற்று சின்னங்களில் முதல் கட்டமாக, 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று சிப்பாய் கலக நினைவுச் சின்னம்.
கலாசார நன்மை இது, 1857ல் சிப்பாய் புரட்சியில் உயிரிழந்த வீரர்களை நினைவு கூர, 1863ல் சிவப்பு கற்களை கொண்டு கோத்திக் கட்டடக்கலை முறையில் கட்டப்பட்டது.
இரண்டாவது, காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள தாரா சிகோ நுாலகம். இது முகலாய மன்னர் ஷாஜகானின் மூத்த மகனும், இளவரசரு மான தாரா ஷிகோவின் இல்லமாகவும் நுாலகமாகவும் இருந்தது. இது 1637ல் கட்டப்பட்டது.
மூன்றாவது, குத்ஸியா தோட்டம். இதுவும் டில்லி சிவில் லைன்ஸ் பகுதியில் காஷ்மீர் கேட் அருகில் உள்ளது. முகலாய ராணி குத்ஸியா பேகம் 18ம் நுாற்றாண்டில் கட்டிய அரண்மனை தோட்டம் மற்றும் மண்டபங்கள் இங்கு உள்ளன.
இது போன்று வசந்த் விஹார், சாந்தினி சவுக் போன்ற பகுதிகளில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களையும் தேர்வு செய்துள்ளனர்.
இந்த திட்டம் குறித்து தொல்லியல் துறை ஆர்வலர்கள் கூறியதாவது:
தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடுவது உலகம் முழுதும் உள்ள நடைமுறை தான். இதனால் வருவாய் மட்டுமில்லாமல், கலாசார நன்மைகளும் ஏற்படும்.
டில்லியில் உள்ள தொல்லியல் தலங்களை குறைந்த விலையில் வாடகைக்கு வழங்கக் கூடாது; அதிக கட்டணம் நிர்ணயித்தால்தான் அரசு நல்ல வருவாய் ஈட்ட முடியும்.
இவ்வாறு நிகழ்ச்சிகளை அனுமதிக்கும் போது நினைவுச் சின்னங்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. டில்லி அரசு இந்த சவால்களை தவிர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
-நமது சிறப்பு நிருபர்-:

