வீடு வாங்குவோரின் தகவல் திருட்டு: ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிர்ச்சி
வீடு வாங்குவோரின் தகவல் திருட்டு: ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதிர்ச்சி
ADDED : மார் 28, 2025 12:22 AM

சென்னை: ரியல் எஸ்டேட் நிறுவனங்களை தொடர்பு கொண்டு, வீடு வாங்குவது குறித்து விசாரிப்போரின் தகவல்கள் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் மக்களின் தேவை அடிப்படையில், பல்வேறு ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துகின்றன. இத்திட்டங்களில் வீடு, மனை வாங்க, பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் விளம்பரங்களை பார்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை, பொதுமக்கள் போனில் தொடர்பு கொள்கின்றனர்.
அவர்களுக்கு கட்டுமான நிறுவனங்கள்,தாங்கள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த விபரங்களை அனுப்புகின்றன. அதன்பின், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக, பொதுமக்கள் தங்களின் அடையாள ஆவணங்களை பகிர்கின்றனர்.
இவ்வாறு, ஒரு குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வீடு வாங்குவது தொடர்பான பேச்சு நடக்கும் போது, சம்பந்தப்பட்ட நபர்களை, போட்டி நிறுவனங்களில் இருந்து, சிலர் அழைத்து வீடு, மனைவிற்பனை குறித்து பேசுகின்றனர். அவர்களுக்கு எப்படி தங்கள் விபரம் செல்கிறது என, மக்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, வீடு வாங்க முயற்சிப்போர் கூறுகையில், 'ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம், வீடு குறித்து விசாரித்தால், மற்ற நிறுவனங்களிடம் இருந்து அழைப்புகள் வருகின்றன. ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடம், நாம் வழங்கும் ஆவணங்கள், மற்றவர்களுக்கு எப்படி செல்கிறது என்று தெரியவில்லை. இது ஒரு வகையில் சைபர் குற்றம்,'' என்றனர்.
இதுகுறித்து. இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ். ராமபிரபு கூறியதாவது:
பொது மக்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களை கொடர்பு கொண்டு விசாரிக்கும் தகவல்கள், வெளி நபர்களுக்கு செல்கின்றன.நாடு முழுதும் இப்பிரச்னை உள்ளது. இது, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சவாலாக அமைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பெரும்பாலான பொது மக்கள், குறிப்பிட்ட சில இணையதள நிறுவனங்களிடம் இருந்து தான், தங்கள் பெயருக்கு, 'இ - மெயில்' முகவரி பெறுகின்றனர். இதன் வாயிலாக பகிரப்படும் தகவல்கள், மூன்றாம் தரப்புக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.
இதைத்தடுக்க, பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கூடுதல் கட்டணம் செலுத்தி, தனிப்பட்ட, 'இ- மெயில்' முகவரிகளை பெற்று பயன்படுத்துகின்றன. தனி நபர்கள், இது போன்ற பாதுகாப்பான, 'இ - மெயில்' முகவரிகளை வாங்கி பயன்படுத்துவது சாத்தியமில்லை.
எனவே, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு, ஆவணங்களை அனுப்பும் போது, பொது மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது நிறுவனங்களின் பெயரில் வரும் அழைப்புகளை, அப்படியே நம்பாமல், முறையாக விசாரித்து, அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.